செய்திகள்

பாகிஸ்தானில் இருந்து வரும் யாத்திரிகர்களுக்கு உம்ரா வரி ரத்து - சவுதி அரசு அறிவிப்பு

Published On 2018-10-17 13:35 GMT   |   Update On 2018-10-17 13:35 GMT
பாகிஸ்தானில் இருந்து உம்ரா யாத்திரை செய்ய வரும் பக்தர்களுக்கான வரியை ரத்து செய்ய சவுதி அரேபியா அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. #umra #umratax #saudiumrathax
இஸ்லாமாபாத்:

இஸ்லாம் தோன்றிய புனித பூமியான சவுதி அரேபியா மற்றும் ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் அந்த மார்க்கத்துடன்  தொடர்புடைய சில புனிதஸ்தலங்களும், முஹம்மது நபியின் மகள், பேர பிள்ளைகள் மற்றும் சில கலிபாக்களின் நினைவிடங்களும் அமைந்துள்ளன.

இந்த இடங்களை பார்வையிட்டு தங்களது காணிக்கைகளை செலுத்தும் நோக்கத்தில் உலகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் புனிதப்பயணம் மேற்கொள்கின்றனர். ஹஜ் யாத்திரையைப்போல் கடமையாக்கப்படா விட்டாலும் ‘உம்ரா’ என்றழைக்கப்படும் இந்த யாத்திரை சிலரது விருப்பத்தேர்வாக உள்ளது.

எந்த மாதத்திலும் இப்படி உம்ரா செய்யவரும் யாத்ரிகர்களுக்கு இந்நாடுகள் ஒரு குறிப்பிட்ட தொகையை வரியாகவும், நுழைவு கட்டணமாகவும் வசூலித்து வருகின்றன.

குறிப்பாக, சவுதி அரேபியா நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு இடையில் ஒருமுறைக்கு மேல் உம்ரா செய்யவரும் வெளிநாட்டு யாத்ரிகர்களிடம் இருந்து 2 ஆயிரம் ரியால்கள் உம்ரா வரியாக வசூலிக்கப்படுகிறது. 

இந்த ஆண்டில் இதுவரை சுமார் 4 லட்சத்து 21 ஆயிரம் வெளிநாட்டு யாத்ரிகர்கள் உம்ரா செய்வதற்காக சவுதி அரேபியா வந்துள்ளனர். இவர்களில் சுமார் 82 ஆயிரம் பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். 

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், தனது முதல் வெளிநாட்டு பயணமாக சமீபத்தில் சவுதி அரேபியா நாட்டுக்கு சென்றார்.

சவுதி மன்னர் சல்மானை சந்தித்த இம்ரான் கான் தங்கள் நாட்டினருக்கான உம்ரா வரியை ரத்து செய்யுமாறு கேட்டு கொண்டார். இதனை ஏற்ற சவுதி அரசு உம்ரா வரியை ரத்து செய்துள்ளதாக பாகிஸ்தான் நாட்டின் அறநிலையத்துறை இன்று தெரிவித்துள்ளது. #umra #umratax #saudiumrathax
Tags:    

Similar News