செய்திகள்

மலேசியா இடைத்தேர்தலில் அன்வர் இப்ராஹிம் வெற்றி - விரைவில் பிரதமராக பதவி ஏற்கிறார்

Published On 2018-10-13 15:27 GMT   |   Update On 2018-10-13 15:27 GMT
மலேசியாவின் போர்ட் டிக்சன் நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் 71 சதவீதம் வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #MalaysiaPM #AnwarIbrahim #AnwarIbrahimvictory
கோலாலம்பூர்:

மலேசிய அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டாலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மடைமாற்றி விட்டதாக மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஜாக் மீது அவரது ஆட்சிக்காலத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. 

இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான மஹதிர் முஹம்மது வலியுறுத்தி வந்தார்.

பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நஜிப் ரஜாக் மீதான மக்களின் அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக மாற்றி விடலாம் என முன்னர் 22 ஆண்டு காலம் பிரதமராக பதவி வகித்த மஹதிர் முஹம்மது தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி தீர்மானித்தது.

முன்னர் மலேசிய துணை பிரதமராக இருந்து ஓரினச் சேர்க்கை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி தலைவரான அன்வர் இப்ராஹிமுடன் முன்னாள் பிரதமர் மஹதிர் முஹம்மது நீண்டகாலமாக பகை பாராட்டி வந்தார். நஜிப் ரஜாக்கை வீழ்த்துவதற்காக அன்வர் இப்ராஹிமுடன் மஹதிர் முஹம்மது கூட்டணி அமைத்தார். 

இந்நிலையில், மலேசிய நாட்டு பாராளுமன்றத்துக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் மஹதிர் முஹம்மது (92) எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

பாராளுமன்ற தேர்தலில் இந்த எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றால் சிறையில் இருக்கும் அன்வர் இப்ராஹிமுக்கு அரசின் சார்பில் பொது மன்னிப்பு அளிப்பதன் மூலம், அவர் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, அந்நாட்டின் பிரதமர் பதவியில் அமரவைப்பதாக எதிர்க்கட்சிகள் கூட்டணி வாக்குறுதி அளித்திருந்தது.

அதன்படி, பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற மஹதிர் முஹம்மது மலேசிய பிரதமராக பதவியேற்ற பின்னர் சிறையில் இருந்த முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்தார். 

இதற்கு மலேசிய துணை பிரதமரும் அன்வர் இப்ராஹிமின் மனைவியுமான வான் அஸிஸா வான் இஸ்மாயில் உறுதுணையாக இருந்தார். அன்வர் இப்ராஹிமை மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக்கி, பிரதமர் பதவியில் அமர வைக்கும் முயற்சிகள் தொடங்கின.



அன்வர் இப்ராஹிம் தேர்தலில் போட்டியிட வசதியாக போர்ட் டிக்சன் நாடாளுமன்ற எம்.பி.யாக இருந்த டேன்யல் பாலகோபால் அப்துல்லா தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இன்று அந்த தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

சுமார் 75 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட தொகுதி வாக்காளர்களில் 21.4 சதவீதம் பேர் இந்தியர்கள். அன்வர் இப்ராகிமை எதிர்த்து 6 வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டனர். 

இன்றிரவு சுமார் 8 மணியளவில் வெளியான தகவலின்படி, மொத்தம் பதிவான வாக்குகளில் 71 சதவீதம் வாக்குகளை பெற்ற அன்வர் இப்ராஹிம் 31 ஆயிரத்து 16 வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றதாக தெரியவந்துள்ளது. அவருக்கு அடுத்தபடியாக வந்த வேட்பாளர் வெறும் 7 ஆயிரத்து 456 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். 

இந்த வெற்றியை தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் அன்வர் இப்ராஹிம், விரைவில் மலேசியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #MalaysiaPM #AnwarIbrahim #AnwarIbrahimvictory
Tags:    

Similar News