செய்திகள்

உலகில் முதன் முறையாக செயற்கை கருத்தரிப்பின் மூலம் பிறந்த 2 சிங்க குட்டிகள்

Published On 2018-10-01 06:31 GMT   |   Update On 2018-10-01 09:33 GMT
தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் முயற்சியால் செயற்கை கருத்தரிப்பின் மூலம் பெண் சிங்கம் ஒன்று 2 சிங்க குட்டிகளை ஈன்றது. #LionCubs
கேப்டவுன்:

26 ஆப்பிரிக்க நாடுகளில் சிங்கங்கள் அதிகம் வாழ்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக அவை தொடர்ந்து அழிந்து வருகின்றன. 43 சதவீதம் சிங்கங்கள் அழிந்த நிலையில் தற்போது சர்வதேச அளவில் 20 ஆயிரம் மட்டுமே உள்ளன.

இந்த நிலையில் சிங்கத்தின் இனத்தை காப்பாற்ற விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் பிரிடோரியாவில் உள்ள பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பெண் சிங்கத்துக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்தனர்.

முன்னதாக உடல் திடகாத்திரமான ஆண் சிங்கத்தின் விந்தணுவை (உயிரணு) சேகரித்தனர். அதை தகுதி வாய்ந்த பெண் சிங்கத்தின் கருமுட்டையுடன் இணைத்து செயற்கை கருத்தரிப்பு செய்தனர். பின்னர் அதை பெண் சிங்கத்தின் கர்ப்பபைக்குள் வைத்தனர்.


அதை தொடர்ந்து 2 சிங்க குட்டிகள் பிறந்தன. அதில் ஒரு ஆண், ஒரு பெண் என 2 குட்டிகளும் நல்ல ஆரோக்யத்துடன் உள்ளன. ஒரே மாதிரியுள்ள 2 குட்டிகளும் வன விலங்குகள் சரணாலயத்தில் ஓடியாடி விளையாடுகின்றன. இவற்றை பொதுமக்கள் கண்டு ரசிக்கின்றனர்.

இதன் மூலம் முதன் முறையாக செயற்கை கருத்தரிப்பின் மூலம் பிறந்த சிங்க குட்டிகள் என்ற பெருமையை இவை பெற்றுள்ளன.

இத்தகைய செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அழிந்து வரும் யானை இனத்தை பாதுகாக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  #Artificially #LionCubs #ArtificialInsemination
Tags:    

Similar News