செய்திகள்

மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு நாடு கடத்த ஒத்துழைப்பு வழங்குகிறது ஆண்டிகுவா

Published On 2018-09-27 08:33 GMT   |   Update On 2018-09-27 08:33 GMT
வங்கிக் கடன் மோசடி வழக்கில் தேடப்படும் மெகுல் சோக்சியை இந்தியாவிற்கு நாடு கடத்தத் தேவையான ஒத்துழைப்பை வழங்க ஆண்டிகுவா முன்வந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. #PNBFraudCase #MehulChoksi
நியூயார்க்:

ஐ.நா. பொதுச்சபையின் 73ஆவது ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ள இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், ஆண்டிகுவா வெளியுறவு மந்திரி சேட் கிரீனைச் சந்தித்துப் பேசினார்.



அப்போது பிஎன்பி வங்கிக் கடன் மோசடியில் தேடப்பட்டு வரும் மெகுல் சோக்சியை நாடு கடத்த உதவுமாறு அவரிடம் சுஷ்மா சுவராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். மெகுல் சோக்சியை நாடு நடத்தும் நடவடிக்கையில் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஆண்டிகுவா வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகச் செய்தித்தொடர்பாளர் ரவீஸ் குமார் தெரிவித்தார். இந்தியாவுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க ஆண்டிகுவா உடன்பட்டுள்ளதாகவும், அதேநேரத்தில் குறித்த காலவரையறை எதையும் கூறவில்லை என்றும் ரவீஸ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண்டிகுவா பிரதமர் எழுதிய கடிதத்தில், மெகுல் சோக்சியின் பாஸ்போர்ட் சட்டப்பூர்வமாக பெறப்பட்டது என்பதால் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய முடியாது என்று கூறியிருந்தார். அவருக்கு எதிராக எந்த சட்டவிரோத புகார்களும் இல்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வங்கி மோசடி வெளிப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக, ஜனவரி மாதம் சோக்சி இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றார். பின்னர் ஆண்டிகுவா பார்புடா குடியுரிமை பெற்றுள்ளார். #PNBFraudCase #MehulChoksi
Tags:    

Similar News