அமெரிக்காவில் கார் விபத்தில் சிக்கி 2 தெலுங்கானா பெண்கள் உயிரிழப்பு
- தோழிகளான இருவரும் 3 ஆண்டுகள் முன் அமெரிக்கா சென்றுள்ளனர்.
- இருவரும் மேலும் 4 நண்பர்களுடன் அமெரிக்காவின் அலபாமாவுக்கு காரில் சுற்றுலா சென்றனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த சாலை விபத்தில், 2 இந்திய இளம்பெண்கள் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் தெலுங்கானாவின் மஹபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த புல்லுகந்தம் மேக்னா ராணி (24) மற்றும் கடியால பாவனா (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தோழிகளான இருவரும் 3 ஆண்டுகள் முன் அமெரிக்கா சென்றுள்ளனர். இருவரும் கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த நிலையில் அமெரிக்காவிலேயே வேலை தேடி வந்தனர்.
இந்நிலையில், இருவரும் மேலும் 4 நண்பர்களுடன் நேற்று முன் தினம் அமெரிக்காவின் அலபாமாவுக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர்.
சுற்றுலாவை முடித்து காரில் திரும்பியபோது மலைப்பாங்கான பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த ராணி, புவனா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். எஞ்சிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்த மீட்புக்குழுவினர் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த ராணி, புவனாவின் உடல்களை விரைந்து இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.