செய்திகள்

அமெரிக்க பொருட்களுக்கு ரூ.22,120 கோடி வரி- ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கை அமலுக்கு வந்தது

Published On 2018-06-23 02:10 GMT   |   Update On 2018-06-23 02:10 GMT
டிரம்ப் நிர்வாகத்துக்கு பதிலடி கொடுக்கிற விதத்தில், அமெரிக்க பொருட்களுக்கு ரூ.22 ஆயிரத்து 120 கோடி அளவில் ஐரோப்பிய ஒன்றியம் வரி விதித்து எடுத்த நடவடிக்கை அமலுக்கு வந்தது. #TrumpExtraTariffs #EuropeanUnion
டப்ளின்:

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது நாட்டில் இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு இறக்குமதிக்கு 25 சதவீதமும், அலுமினியம் இறக்குமதிக்கு 10 சதவீதமும் வரி விதித்து கடந்த மார்ச் மாதம் நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் ஐரோப்பிய ஒன்றியம், கனடா, மெக்சிகோ மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன.

எனவே இந்த நடவடிக்கைக்கு எதிராக உலகளவில் கண்டனங்கள் குவிந்தன. ஆனால் அவற்றை டிரம்ப் நிராகரித்தார். அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்தியாளர்கள் முக்கியம் என்றும், சர்வதேச அளவில் ஏற்பட்டு இருக்கிற தேக்க நிலையால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

டிரம்ப் நிர்வாகத்துக்கு பதிலடி தருகிற வகையில், அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற விவசாய பொருட்கள், இரும்பு, உருக்கு பொருட்கள் என மொத்தம் 29 பொருட்கள் மீதான வரியை அதிரடியாக இந்தியா உயர்த்தியது.

பாதாம்பருப்பு, அக்ரூட் பருப்பு உள்ளிட்டவை வரி உயர்த்தப்பட்ட பொருட்களில் அடங்கும். ஆகஸ்டு 4-ந் தேதி அமலுக்கு வர உள்ள இந்த வரி உயர்வு 241 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,638 கோடி) மதிப்பிலானது ஆகும்.

அடுத்த அடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 2.8 பில்லியன் யூரோ (சுமார் ரூ.22 ஆயிரத்து 120 கோடி) வரி விதித்து நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த வரி விதிப்பு நேற்று அமலுக்கு வந்தது.

வரி விதிக்கப்படுகிற பொருட்களில் போர்போன் விஸ்கி, மோட்டார் சைக்கிள்கள், ஆரஞ்சு பழச்சாறு உள்ளிட்டவை அடங்கும்.

இந்த வரி விதிப்பு தொடர்பாக டப்ளின் நகரில் உள்ள அயர்லாந்து நாடாளுமன்றத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கமிஷனர் ஜீன் கிளவுட் ஜங்கர் பேசினார். அப்போது அவர் கூறும்போது, “அமெரிக்காவின் வரி விதிப்பு, எல்லா தர்க்கத்துக்கும், வரலாற்றுக்கும் எதிராக அமைந்து உள்ளது. எனவே எங்களின் பதிலடி, தெளிவானது. சரியாக அளவிடப்பட்டது” என்று கூறினார்.

மேலும், “அமெரிக்க வரி விதிப்பை சமன் செய்யவும், ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாதுகாக்கவும், என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வோம்” என்றும் கூறினார்.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலக்காக, புகையிலை, ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள், வேர்க்கடலை தூள் உள்ளிட்டவை அமைந்து உள்ளன. இவற்றின் மீது ஐரோப்பிய ஒன்றியம் 25 சதவீதம் வரி விதித்து உள்ளது.

மேலும், அமெரிக்க காலணிகள், துணி வகைகள், சலவை எந்திரங்கள் மீது 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

அமெரிக்க வரி விதிப்பும், அதற்கு பதிலடி தருகிற விதத்தில் பிற நாடுகளின் வரி விதிப்பும் உலகளாவிய வர்த்தக போராக மாறுகிற ஆபத்தில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளன. #TrumpExtraTariffs #EuropeanUnion
Tags:    

Similar News