செய்திகள்

நியூயார்க் நகரில் ஐ.நா. சபை தலைமையகத்தில் யோகா தினம் கொண்டாட்டம்

Published On 2018-06-21 19:15 GMT   |   Update On 2018-06-21 19:15 GMT
4-வது சர்வதேச யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. #YogaDay #NewYork
நியூயார்க்:

4-வது சர்வதேச யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில் பல்வேறு நாடுகளின் தூதர்கள், ராஜ்ய பிரதிநிதிகள், ஆன்மிக தலைவர்கள், குழந்தைகள் கலந்துகொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஐ.நா. துணைப்பொதுச்செயலாளர் அமினா முகமது பேசுகையில், “இன்றைய உலகம் நம்ப முடியாத அளவுக்கு சிக்கலானது. நமது முக்கிய மதிப்புகள் அழிந்து கொண்டிருக்கிற சவாலை சந்தித்து வருகிறோம். நமது வாழ்க்கையில் பல்வேறு அழுத்தங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதையெல்லாம் கடந்து நின்று இன்றைய தினம் இளைய தலைமுறையினர் யோகாவில் ஈடுபட்டு உள்ளனர். நமது உடல், உள்ள ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது. அதில் யோகா மிக முக்கியமான, சரியான பங்களிப்பு செய்கிறது” என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன், இந்தியாவில் தோன்றிய யோகா கலையின் பாரம்பரிய பெருமைகளை விளக்கினார். அவரும் யோகா பயிற்சி செய்தார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி யோகா தினத்தையொட்டி வெளியிட்டு இருந்த செய்தி கொண்ட வீடியோ திரையிட்டு காட்டப் பட்டது.  #YogaDay #NewYork #Tamilnews
Tags:    

Similar News