செய்திகள்

அமெரிக்கா - வடகொரியா போல் இந்தியாவும் பாகிஸ்தானும் சமாதானமாக போக வேண்டும் - ஷாபாஸ் ஷரிப்

Published On 2018-06-13 09:48 GMT   |   Update On 2018-06-13 09:48 GMT
வடகொரியாவும் அமெரிக்காவும் சிங்கப்பூரில் சமாதானம் செய்துகொண்டது போல் இந்தியாவும் பாகிஸ்தானும் சமாதானமாக போக வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் தம்பி குறிப்பிட்டுள்ளார். #ShahbazSharif #Indiapaktalks
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் ஊழல் வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் ஆளும்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) தலைவர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதால் அவரது தம்பி ஷாபாஸ் ஷரிப் கட்சி தலைவர் பதவியை ஏற்றுள்ளதுடன் வரும் ஜூலை மாதம் 25-ம் தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகவும் முன்நிறுத்தப்பட்டுள்ளார்.



இந்நிலையில்,  சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பரம எதிரிகளாக இருந்து வந்த வடகொரியாவும் அமெரிக்காவும் சமாதானம் செய்துகொண்டது போல் இந்தியாவும் பாகிஸ்தானும் சமாதானமாக போக வேண்டும் என ஷாபாஸ் ஷரிப் குறிப்பிட்டுள்ளார்.

‘கொரியா போரின் ஆரம்பகட்டத்தில் இருந்தே அமெரிக்காவும் வடகொரியாவும் பரம எதிரிகளாக இருந்து வந்துள்ளன. அணு ஆயுத வலிமையை காட்டி ஒருநாட்டை மற்றொரு நாடு அச்சுறுத்தி வந்தன. அணு ஆயுதம் என்ற கொள்கையை கைவிட்டு வடகொரியாவும் அமெரிக்காவும் அமர்ந்துப் பேசி சமாதானம் செய்துகொள்ள முடியுமானால், காஷ்மீர் விவகாரத்தை மையமாக வைத்து முதலில் பேச்சுவார்த்தையை தொடங்கி, அதே பாதையை இந்தியாவும் பாகிஸ்தானும் ஏன் கையாள கூடாது?’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
நமது பிராந்தியத்தில் இருதரப்பு அமைதி பேச்சுவார்த்தைக்கான நேரம் கனிந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவதை சர்வதேச சமுதாயம் உறுதிப்படுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்துக்கு உடன்பட்டு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஷாபாஸ் ஷரிப் வலியுறுத்தியுள்ளார். #ShahbazSharif #Indiapaktalks
 
Tags:    

Similar News