செய்திகள்

இந்தியாவுடன் போருக்கு இடமில்லை என்கிறது பாகிஸ்தான்

Published On 2018-06-04 14:16 GMT   |   Update On 2018-06-04 14:16 GMT
இந்தியாவுடன் போர் நடைபெறுவதற்கு இடமில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. அதேசமயம், அமைதியை விரும்பும் பாகிஸ்தானை பலவீனமாக நினைக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளது. #PakistanArmy
இஸ்லாமாபாத்:

ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. ரம்ஜான் நோன்பை முன்னிட்டு எல்லையில் தாக்குதலை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனாலும், பாகிஸ்தான் ராணுவம் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப்பிரிவு தலைமை இயக்குனர் ஆசிப் கபூர் இன்று இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்திய ராணுவம் 2018-ம் ஆண்டில் 1077 முறை எல்லையில் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. எங்களுடைய விருப்பம் எல்லாம் அமைதிதான் என்பதற்காக பலவீனமானவர்கள் என்று நினைக்க வேண்டாம். இந்திய ராணுவம் கடந்த வாரம் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தை மீறிய போதும் நாங்கள் பதிலடி கொடுக்கவில்லை. இந்திய ராணுவம் பொதுமக்கள் குடியிருப்பை குறிவைத்து தாக்குதல் நடத்திய போதுதான் நாங்கள் தாக்குதலை நடத்தினோம். 

போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பாகிஸ்தான் மதிப்பளிக்க விரும்புகிறது. எதிர்காலத்தில் என்ன வேண்டும் என்பதை இந்தியர்கள் உணரவேண்டும், புரிந்துக்கொள்ள வேண்டும். அணு ஆயுத சக்திகளாக விளங்கும் இந்தியா பாகிஸ்தான் இடையே ஒருபோதும் போருக்கு இடமில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

எல்லையில் இந்திய ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் சிறுமியும், மூதாட்டியும் உயிரிழந்திருப்பதாகவும் எனவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PakistanArmy
Tags:    

Similar News