செய்திகள்

298 பயணிகளுடன் சென்ற மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் ரஷ்யாவுக்கு தொடர்பு?

Published On 2018-05-25 10:46 GMT   |   Update On 2018-05-25 10:46 GMT
298 பயணிகளுடன் கடந்த 2014-ம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தை, ராக்கெட் மூலம் ரஷ்யாதான் தாக்கி அழித்ததாக வெளியான தகவலை நெதர்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி உறுதிபடுத்தியுள்ளார். #MH17investigation #Russianinvolvement #StefBlok
ஆம்ஸ்டர்டாம்:

உக்ரைனில் கடந்த 2014-ம் ஆண்டு அரசியல் நிலையற்ற தன்மை ஏற்பட்ட போது, கிரீமியா பகுதி மக்கள் ரஷ்ய கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்தனர். இதனால், ரஷ்யா ராணுவ படைகள் கடந்த 2014-ம் ஆண்டு கிழக்கு உக்ரைன் பகுதிக்குள் ஊடுருவி கிரீமியா பகுதியை மீண்டும் ரஷ்யாவுடன் இணைத்தது.

அந்தாண்டில் ஜூலை 17-ம் தேதி, மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்எச்-17 விமானம் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி 298 பயணிகளுடன் சென்றது.அப்போது ஒரு ஏவுகணை இந்த விமானத்தை தாக்கியதில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர்.



விமானத்தை சுட்டு வீழ்த்தியது யார் என அறிய சர்வதேச அளவில் கூட்டு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவின் விசாரணை அறிக்கையின்படி, ரஷ்யாவின் விமான எதிர்ப்பு ஏவுகணை பிரிவிலிருந்துதான் பக்-டெலர் ரக ஏவுகணை ஏவப்பட்டு, மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதாகவும், ஆனால் ஏவுகணையை உபயோகித்தது யார் என்பது குறித்து தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, நெதர்லாந்து நாட்டின் அமைச்சரவையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த நெதர்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஸ்டெப் பிளாக், விமானம் தாக்கப்பட்ட சம்பவத்தில் ரஷ்யாவிற்கு நேரடி தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஸ்டெப் பிளாக்கின் இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டெப் பிளாக்கின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த ரஷ்யா, விமானம் தாக்கப்பட்ட சம்பவத்தில் ரஷ்யாவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என கூறியுள்ளது. #MH17investigation #Russianinvolvement #StefBlok
Tags:    

Similar News