செய்திகள்

மலேசிய பாராளுமன்ற தேர்தல் - மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது

Published On 2018-05-09 20:29 GMT   |   Update On 2018-05-09 20:29 GMT
மலேசிய பாராளுமன்ற தேர்தலில் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி ஆட்சியை கைப்பற்றி உள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #MalaysiaElection #Oppositecoalition #Won
கோலாலம்பூர்: 

222 உறுப்பினர்களை கொண்ட மலேசிய பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. பிரதமர் நஜீப் ரஜாக்கின் ஆளும் பி.என்.கட்சிக்கும், முன்னாள் தலைவர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 

நேற்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. அங்குள்ள வாக்கு சாவடிகளில் வரிசையில் நின்று பொதுமக்கள் ஓட்டு போட்டனர். மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் ஒன்றரை கோடி மக்களில் 69 சதவிகிதம் பேர் வாக்களித்தனர்.

இதையடுத்து, நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆளும் பி.என். கட்சி தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் 54 இடங்களிலும், மகாதிர் முகமது தலைமையிலான பக்கட்டான் ஹரப்பான் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர்கள் 51 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர் என முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. 



இந்நிலையில், மலேசியா தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் மகாதிர் முகம்மது இருவரும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சி அமைக்க 112 உறுப்பினர்களின் பலம் தேவை என்னும் நிலையில் இந்த தேர்தலில் மகாதிர் முகமதுவின் எதிர்க்கட்சி கூட்டணி 115 இடங்களை பிடித்து ஆட்சியை கைப்பற்றுகிறது என தெரிவித்தனர்.

மலேசியா வரலாற்றில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு அங்குள்ள எதிர்க்கட்சியினர் ஆட்சியை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. #MalaysiaElection #Oppositecoalition #Won
Tags:    

Similar News