செய்திகள்

ஆப்பிளின் சில ஐபோன் மாடல்கள் விற்பனைக்கு தடை

Published On 2018-12-21 06:52 GMT   |   Update On 2018-12-21 08:04 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்கள் விற்பனைக்கு ஜெர்மனி நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. #Apple #iPhone #Qualcomm



ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக குவால்காம் தொடர்ந்த வழக்கில் ஜெர்மனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன் படி ஜெர்மனியில் ஐபோன் 7,  ஐபோன் 8 மாடல்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சீன நீதிமன்றமும் சில ஐபோன்களின் விற்பனைக்கு அந்நாட்டில் தடை விதித்து இருந்தது.

ஐபோன் விற்பனைக்கான தடையை ரத்து செய்யக்கோரி ஆப்பிள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும், ஜெர்மனி நாட்டின் சில மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் ஐபோன்களை தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றன.

ஜெர்மனியில் இயங்கி வரும் 15 விற்பனை மையங்களில் நீதிமன்ற உத்தரவின் படி ஐபோன் மாடல்கள் விற்பனை செய்யப்படாது என ஆப்பிள் தெரிவித்துள்ளது. ஐபோன்களின் விற்பனை மற்றும் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆப்பிள் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுவது உறுதியாகி இருக்கிறது.



ஜெர்மனியில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்களின் விற்பனை மூலம் ஆப்பிள் பெற்ற மொத்த வருவாய் மற்றும் லாபம் உள்ளிட்ட விவரங்களை ஆப்பிள் வழங்க வேண்டும் என்ற குவால்காமின் கோரிக்கையை ஏற்று அது தொடர்பான விவரங்களை சமர்பிக்க ஆப்பிள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே சீன விற்பனைக்கான தடையை தவிர்க்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களுக்கு மென்பொருள் அப்டேட் வழங்கியது. புதிய அப்டேட் மூலம் ஐபோன்களின் மென்பொருள்கள் குவால்காம் காப்புரிமைகளை மீறாத வகையில் இருக்கும் என ஆப்பிள் தெரிவித்தது.

இவ்வாறு பயனர்கள் தங்களது ஐபோன்களை அப்டேட் செய்யும்போது செயலிகளிடையே மாறும் விதம், அளவு மற்றும் புகைப்படங்களின் தோற்றம் உள்ளிட்டவை மாறியிருப்பதை கவனிக்க முடியும். ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் உலகம் முழுவதும் ஒருவரை ஒருவர் எதிர்த்து பரஸ்பரம் வழக்கு தொடர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News