செய்திகள்

ரூ.55,000 செலுத்தியவருக்கு சோப் டெலிவரி செய்த பிளிப்கார்ட்

Published On 2018-02-02 13:02 IST   |   Update On 2018-02-02 13:02:00 IST
மும்பையை சேர்ந்த வாலிபர் பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 8 முன்பதிவு செய்து, சோப் டெலிவரி செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மும்பை:

ஸ்மார்ட்போன் வாங்குவதே பெரும் கஷ்டமான விஷயம். இதில் ஐபோன் வாங்குவது எவ்வளவு கஷ்டமான காரியம் என அதை வாங்க இருப்பவர்களுக்கும், அதற்கான தியாகங்களை செய்து பணத்தை சேமிப்பவர்களுக்கு அதிகம் புரியும். 

மும்பையை சேர்ந்த தப்ரெஜ் மெகபூப் நகரேலி எவ்வளவு நாள் கனவுடன் ஐபோன் முன்பதிவு செய்தாரோ, அவருக்கு மோசமான அனுபவத்தை பிளிப்கார்ட் ஏற்படுத்தி உள்ளது. தனகுக்கு அதிகம் பிடித்த ஐபோன் 8 மாடலை வாங்க ரூ.55,000 ஒரு தவணையில் செலுத்தி பிளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்திருந்தார். 

பிளிப்கார்ட் சார்பில் அவருக்கு விநியோகம் செய்யப்பட்ட பார்சலில் ஐபோன் 8 பெட்டிக்கு மாற்றாக துணி துவைக்கும் சோப்பு கட்டி வைக்கப்பட்டிருந்தது. ரூ.55,000-ஐ ஒரே தவணையில் செலுத்தியவருக்கு பெட்டியில் சோப்பு கட்டியை பார்த்தும் அதிர்ச்சி ஏற்பட்டது. உடனே மும்பையின் பைகுலா காவல் நிலையத்தில் பிளிப்கார்ட் மீது ஏமாற்றப்பட்டதாக தப்ரெஜ் புகார் அளித்திருக்கிறார்.



ஜனவரி 22-ம் தேதி தப்ரெஜ்க்கு பார்சல் விநியோகம் செய்யப்பட்டது. நகரேலி நேற்று மும்பையின் பைகுலா காவல் நிலையத்தில் தான் ஏமாற்றப்பட்டதற்கு முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில் புகார் அளித்திருக்கிறார். 

இதுகுறித்து பிளிப்கார்ட் செய்தி தொடர்பாளர் சார்பில் பதில் அளித்துள்ளார். அதில் இவ்விகாரம் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் முன்னதாக பலமுறை அரங்கேறியுள்ளது. எனினும் இதுபோன்ற விவகாரங்களின் உண்மை நிலை கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது.

Similar News