தமிழ்நாடு செய்திகள்

மேலூர் அருகே கள்ளக்காதலி கண் முன்பு வாலிபர் அடித்துக்கொலை: போலீசார் விசாரணை

Published On 2025-08-17 15:09 IST   |   Update On 2025-08-17 15:09:00 IST
  • ஒவ்வொரு நாளும் தனது வீட்டில் அச்சத்துடன் வசித்து வந்த ராகவி, சதீஸ்குமாரை செல்போனில் அழைத்து தன்னை அழைத்து செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
  • ராகவி அளித்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலூர்:

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலம் அருகேயுள்ள பொட்டபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகாராஜா மகன் சதீஸ்குமார் (வயது 21). படித்துவிட்டு கிடைத்த வேலைக்கு சென்று வந்தார். தும்பப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் என்பரது மனைவி ராகவி (29). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் செல்வம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் பொட்டபட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் ராகவி குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இதற்கிடையே சதீஸ்குமாருக்கும், ராகவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. முதலில் செல்போனில் மட்டும் பேசி வந்த இருவரும் பின்னர் தங்களது குடும்பத்தினருக்கு தெரியாமல் ஊர் சுற்றி வந்தனர். ஒரு கட்டத்தில் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு யாரிடமும் கூறாமல் ஊரை விட்டு சென்று வேறொரு ஊரில் தம்பதியராக வசித்து வந்தனர்.

இந்தநிலையில் ராகவியின் பெற்றோர், தங்கள் மகள் வீட்டில் இருந்த நகைகளை எடுத்து சென்று விட்டதாக போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனை அறிந்த சதீஸ்குமார், ராகவியை மீண்டும் அவரது வீட்டில் கொண்டு சென்று விட்டு வந்தார்.

அப்போது முதல் ராகவியை அவரது சகோதரர் ராகுல் மற்றும் உறவினர்களான சரிதா, அழகர், ஆறுமுகம், கண்ணாயி, மணிமேகலை ஆகியோர் வீட்டுக்காவலில் பூட்டி வைத்துள்ளனர். சதீஸ்குமாருடன் செல்ல நினைத்தால் உங்கள் இருவரையும் கொன்று விடுவோம் என்றும் கூறி மிரட்டியுள்ளனர். இதனால் வேறுவழி யின்றி ராகவி அந்த வீட்டிலேயே அடைபட்டு கிடந்தார்.

ஒரே சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சில காலம் கழித்து அழைத்து செல்வதாக சதீஸ்குமார் கூறிச்சென்றார். அதுவரை அவர் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார். ஆனாலும் ஒவ்வொரு நாளும் தனது வீட்டில் அச்சத்துடன் வசித்து வந்த ராகவி, சதீஸ்குமாரை செல்போனில் அழைத்து தன்னை அழைத்து செல்லுமாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து இதே வீட்டில் வாழ்ந்தால் தன்னுடையே பெற்றோரும், சகோதரர்களும் அடித்து கொன்றுவிடுவார்கள் என்று கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து மீண்டும் ராகவியை தன்னுடன் அழைத்து செல்ல நேற்று சதீஸ்குமார் பொட்டபட்டிக்கு வந்திருந்தார்.

பின்னர் ராகவியை அழைத்துக்கொண்டு கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்ற அவர், தங்களை சேர்த்து வைக்குமாறு தெரிவித்தார். இதையடுத்து இருதரப்பு உறவினர்களை அழைத்து பேசிய போலீசார், கணவரை இழந்த பெண் என்பதாலும், இருவரும் மேஜர் என்பதாலும் அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். அதன் பிறகு நள்ளிரவில் சதீஸ்குமார், ராகவி இருவரும் மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

ஆனாலும் ஆத்திரம் தீராத ராகவியின் சகோதரர் ராகுல் சதீஸ்குமாரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக தனது நண்பர்கள் அய்யனார், அருள்பாண்டி இருவரையும் அழைத்து திட்டம் தீட்டினார். அதன்படி சென்னை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற சதீஸ்குமார், ராகவியை காரில் பின்தொடர்ந்தனர்.

அய்யப்பட்டி அருகே சென்றபோது அந்த காரில் வந்தவர்கள் சதீஸ்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் இருள் சூழ்ந்த பகுதிக்கு சதீஸ்குமாரை மட்டும் இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கினர்.

இதில் சதீஸ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் காரில் வந்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. சாலையில் பலத்த காயங்களுடன் கிடந்த ராகவி கொடுத்த தகவலின்பேரில் அங்கு விரைந்து வந்த கொட்டாம்பட்டி போலீசார் அடித்து கொலை செய்யப்பட்ட சதீஸ்குமாரின் உடலை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த ராகவி 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுதொடர்பாக ராகவி அளித்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சதீஸ்குமாரை கொலை செய்தது ராகவியின் உறவினர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News