சென்னையில் வாலிபர் கொலை: உடலை காரில் கடத்தி வந்து கோவையில் கிணற்றில் வீசிய நண்பர்கள்
- சென்னை தனியார் நிறுவனத்தில் ஜெயராமன் பண ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
- போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோவை:
கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது45). நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவர் முருகப்பெருமாள்(26).
இவர்கள் 2 பேரும் கோவை செட்டிப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு சென்று, நாங்கள் குடிபோதையில் ஜெயராமன் என்பவரை கொன்று கிணற்றில் வீசியதாக கூறி சரண் அடைந்தனர்.
போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் கிடந்த ஜெயராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
இதற்கிடையே செட்டிப்பாளையம் போலீசார் ஜெயராமன் படுகொலை தொடர்பாக சரண் அடைந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல்களை கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோவை கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட ஜெயராமன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
அப்போது இதே நிறுவனத்தில் டிரைவர்களாக வேலை பார்த்த பாலமுருகன், முருகப்பெருமாள் ஆகியோரிடம் ஜெயராமனுக்கு பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் இரவு நேரங்களில் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பதை வாடிக்கையாக கொண்டு இருந்தனர்.
இதற்கிடையே சென்னை தனியார் நிறுவனத்தில் ஜெயராமன் பண ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரிடம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஜெயராமன் தனது சக நண்பர்களான பாலமுருகன், முருகப்பெருமாள் ஆகியோருடன் சம்பவத்தன்று ஒன்றாக அமர்ந்து மது குடித்தார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.
ஜெயராமனுக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருக்கிறது. இந்த நிலையில் அவர் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனால் பயந்து போன 2 பேரும் தனியார் நிறுவனத்தினரை தொடர்பு கொண்டு பேசிவிட்டு பின்னர் ஜெயராமன் உடலை காரில் கோவைக்கு கொண்டுவந்து கிணற்றில் வீசியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
கோவை கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட ஜெயராமன் படுகொலையில் நுங்கம்பாக்கம் தொழில் அதிபர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தே கிக்கின்றனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை போலீசார் சென்னைக்கு விரைந்து உள்ளனர். விசாரணைக்கு பிறகு தான் ஜெயராமன் எப்படி இறந்தார் என்பது பற்றிய உண்மையான விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.