தமிழ்நாடு செய்திகள்

வேலூரில் காதலியை அடித்துக்கொன்று வாலிபர் தற்கொலை - போலீசார் விசாரணை

Published On 2025-05-23 10:55 IST   |   Update On 2025-05-23 10:55:00 IST
  • கடந்த 6 மாதங்களாக சுரேஷ், ஷூ கம்பெனிக்கு வேலைக்கு செல்லவில்லை.
  • ஆத்திரமடைந்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து சபீனாபானுவை தாக்க முயன்றுள்ளார்.

வேலூர்:

வேலூர் சின்ன அல்லாபுரம் கே.கே. நகர் திரவுபதியம்மன் கோவில் 3-வது தெருவை சேர்ந்தவர் சபீனாபானு (வயது 33). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்தார். சபீனாபானு, சின்னஅல்லாபுரத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

தொடர்ந்து சதுப்பேரியில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதே கம்பெனியில் வேலூர் விருப்பாட்சிபுரம் நேதாஜி தெருவை சேர்ந்த சுரேஷ் (35) என்பவரும் வேலை செய்து வந்தார்.

இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்து வந்ததால் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக சுரேஷ், ஷூ கம்பெனிக்கு வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவருடன் பேசுவதை சபீனா பானு தவிர்த்து வந்தார்.

பலமுறை சுரேஷ், சபீனாபானுவை தொடர்பு கொண்டும் அவர் பேச மறுத்ததாக தெரிகிறது. இதனால் சபீனாபானு மீது கோபத்தில் இருந்த சுரேஷ், நேற்றும் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.

ஆனால் அவர் போனை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து நேற்று இரவு 11.30 மணியளவில் சுரேஷ், சின்ன அல்லாபுரத்தில் உள்ள சபீனாபானுவின் வீட்டுக்கு சென்றார். அவரிடம் 'ஏன் என்னிடம் 2 மாதங்களாக பேசவில்லை.

வேறு யாருடனாவது தொடர்பு உள்ளதா?' என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஆத்திரமடைந்த சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து சபீனாபானுவை தாக்க முயன்றுள்ளார்.

இதை பார்த்த சபீனாபானுவின் தந்தை சிராஜூதீன், தாய் ஆஜிரா ஆகியோர் தடுக்க முயன்றனர். இருவரையும் சுரேஷ் கம்பியால் தலையில் தாக்கினார்.

இதில் படுகாயமடைந்த அவர்கள் மயங்கினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சபீனாபானு, வீட்டில் இருந்து வெளியே தப்பி ஓடினார். அவரை விரட்டி சென்ற சுரேஷ், சபீனாபானு வீட்டின் அருகில் இருந்த மின்கம்பம் அருகே மடக்கி அவரை சரமாரியாக தாக்கினார் .

இதில் சம்பவ இடத்திலேயே சபீனாபானு பரிதாபமாக இறந்தார். உடனே, சுரேஷ் தனது பைக்கில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், பாகாயம் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டுகள் சக்கரவர்த்தி, செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சுரேஷின் செல்போன் எண்ணை வைத்து விருபாட்சிபுரம் நேதாஜி தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர்.

அங்கு தனது அறையில் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்கிட்ட நிலையில் சுரேஷ் பிணமாக தொங்கினார்.

சபீனாபானுவை கொலை செய்த பின்னர், வீட்டுக்கு திரும்பிய சுரேஷ், தூக்கிட்டு தற்கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து இருவரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

காயமடைந்து மயங்கிய நிலையில் கிடந்த சபீனாபானுவின் பெற்றோரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மேலும் இந்த கொலை மற்றும் தற்கொலை தொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News