தமிழ்நாடு செய்திகள்

100 பவுன் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் மீது தாக்குதல்: கணவர், மாமியார் உள்பட 3 பேர் மீது வழக்கு

Published On 2025-09-10 14:13 IST   |   Update On 2025-09-10 14:13:00 IST
  • அதிகாரிகள் இருதரப்பினரையும் விசாரணைக்கு அழைத்தனர்.
  • குழந்தையை பறித்துக் கொண்டு அவரை வயிற்றில் எட்டி உதைத்தாக கூறப்படுகிறது.

மதுரை:

மதுரை மாவட்டம் திரு மங்கலத்தை அடுத்த பேரையூர் தாலுகா இ.கோட்டைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகள் அர்ச்சனா (வயது 23). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ராஜீவ்நகரை சேர்ந்த பரத் (25) என்பவருக்கும் கடந்த 25.10.2023-ல் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் நகை, பணம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

இந்தநிலையில் திருமணமான 6-வது மாதத்தில் இருந்து மாப்பிள்ளை வீட்டாரின் கோர முகம் வெளிப்பட தொடங்கியது. அதாவது கணவர் பரத், அவரது தம்பி ஆதிதர்மலிங்கம், தாயார் ஈஸ்வரி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து, அர்ச்சனாவிடம் உனது தந்தையிடம் சென்று 100 பவுன் நகை மற்றும் சொத்தில் பங்கு கேட்டு வாங்கி வருமாறு கூறியுள்ளனர். இதற்கு அர்ச்சனா மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கர்ப்பிணியாக இருக்கும் மருமகள் என்றும் பாராமல் அவரை அடித்து, உடைத்து பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாக்கி உள்ளனர்.

ஆபாச வார்த்தைகளால் திட்டித்தீர்த்த அவர்களிடம் இனிமேலும் வாழமுடியாது என்று கருதிய அர்ச்சனா, நடந்த சம்பவம் குறித்து உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அவர்கள் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலத்திற்கு சென்று தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி அர்ச்சனா அங்கு சென்று புகார் கொடுத்தார்.

இதையடுத்து அதிகாரிகள் இருதரப்பினரையும் விசாரணைக்கு அழைத்தனர். கடந்த 14-ந்தேதி தான் பெற்றெடுத்த குழந்தையுடன் அர்ச்சனா சமூக நலத்துறை அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது அங்கு வந்த அர்ச்சனாவின் கணவர், மனைவியின் கையில் இருந்த குழந்தையை பறித்துக் கொண்டு அவரை வயிற்றில் எட்டி உதைத்தாக கூறப்படுகிறது. மேலும் அவரது தம்பி மற்றும் அர்ச்சனாவின் மாமியாரும் சேர்ந்துகொண்டு தாக்கியுள்ளனர்.

இதனை தடுத்த அர்ச்சனாவின் தந்தை முருகேசனும் கடுமையாக தாக்கப்பட்டார். அப்போது அர்ச்சனா கழுத்தில் இருந்து அறுந்து விழுந்த 1 பவுன் சங்கிலியை கணவர் பரத்தின் தம்பி ஆதிதர்மலிங்கம் அபகரித்துக்கொண்டதாக அர்ச்சனா, மதுரை தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பரத், ஆதிதர்மலிங்கம், ஈஸ்வரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News