அருப்புக்கோட்டை தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியா?-பிரேமலதா தலைமையில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தல்
- அனைவரும் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும்.
- மாலையில் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.
சென்னை:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று முதல் 4 நாட்களுக்கு நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த கூட்டம் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை என 2 பிரிவாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. முதல் நாளான இன்று காலையில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனையில் ஈடுபட்டார்.
மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி என 7 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற இன்றைய கூட்டத்தில் தேர்தல் பணி, கட்சி வளர்ச்சி பணி, தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, கிளைக் கழகங்களை வலுப்படுத்துவது, சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றியம், நகரம், வார்டு, பகுதி, வட்டம் பேரூர் வார்டுகளுக்கு சார்பு அணி நிர்வாகிகள் தேர்வு செய்வது, பூத் முகவர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறு இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் பிரேமலதா பேசியதாவது:-
இன்று முதலே நீங்கள் அனைவரும் உங்களுக்கான பணிகளை தொடங்க வேண்டும். நாம் மேற்கொள்ளும் அனைத்து பணிகளும் 2026 தேர்தலுக்கான பணியாகவே இருக்க வேண்டும்.
போனில் பேசி நான் அதைச் செய்துவிட்டேன், இதை செய்து விட்டேன் என்று கூறாமல் களத்திற்கு சென்று ஒவ்வொருவரும் வெற்றி வீரர்களாக பணியாற்ற வேண்டும்.
உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியை முழுமையாக ஆராய்ந்து அனைவரும் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும்.
பூத் கமிட்டி நிர்வாகிகள், கிளைக் கழக தொண்டர்கள் வரை அனைவரையும் நிர்வாகிகள் சந்தித்து பேச வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவே இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை அனைவரும் தெரிவியுங்கள். எங்கள் கருத்துக்களையும் கேட்டுக்கொள்ளுங்கள். நமது பணிகள் அனைத்தும் தேர்தலில் வெற்றி பெறும் வகையிலேயே அமைய வேண்டும்.
இவ்வாறு பிரேமலதா பேசினார்.
இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் அனைவரும் சட்டமன்றத் தேர்தலில் அதிகமான தொகுதிகளை கேட்டு போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இது தொடர்பாக கூட்டத்தில் பேசிய மூத்த நிர்வாகி ஒருவர், வருகிற சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 10 எம்.எல்.ஏ.க்களாவது வெற்றி பெற்று சட்டசபைக்குள் செல்ல வேண்டும்.
அதற்கேற்ப நாம் செயல்பட வேண்டும் என்று ஆவேசமாக தனது கருத்தை தெரிவித்தார்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் (சுமார் 4 ஆயிரம் ஓட்டுகள்)தோல்வியை தழுவிய விஜயபிரபாகரனை மீண்டும் அதே மாவட்டத்தில் களமிறக்குவதற்கு அம்மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அருப்புக்கோட்டை தொகுதியில் தான் விஜயபிரபாகரனுக்கு மற்ற சட்டமன்ற தொகுதிகளை விட அதிக அளவில் வாக்குகள் கிடைத்துள்ளது.
இதனை மையமாக வைத்து விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் இன்றைய கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தலில் விஜயபிரபாகரனை அருப்புக்கோட்டை தொகுதியில் களம் இறக்கினால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்கிற கருத்தையும் பதிவு செய்து இருக்கிறார்கள்.
இதன்மூலம் அ.தி.மு.க. கூட்டணியில் அருப்புக்கோட்டை தொகுதியை அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டு பெறுவதற்கும் தே.மு.தி.க. தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாலையில் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை செயலாளர் பார்த்தசாரதி, இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன் மற்றும் துணை செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.யூ.சந்திரன், சுபாரவி ஆகியோர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர்.
தே.மு.தி.க.வில் மொத்தம் 84 மாவட்ட செயலாளர்கள் பொறுப்பில் உள்ளனர்.
மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வருகிற 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள்.