அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்காதது ஏன்?- ஜெயக்குமார்
- முதல்வர் தலைமையில்தான் இந்த கூட்டம் நடந்திருக்க வேண்டும்; ஆனால் ஏன் வரவில்லை?
- அதிமுக ஆட்சியில் விருப்பு, வெறுப்பின்றி பிற கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
பொதுக்கூட்டங்கள், பிரசார கூட்டங்கள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், ரகுபதி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.
கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ஜ.க., த.வா.க., ம.நீ.ம., ம.ம.க., ஐ.யூ.எம்.எல்., ஆம் ஆத்மி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 20 கட்சிகள் பங்கேற்றன.
இந்நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற வேண்டும்.
ஆனால் முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் ஏன் பங்கேற்கவில்லை என்று தெரியவில்லை. எங்களது ஆட்சி காலத்தில் ஆயிரத்துக்கும் மேல் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதி கொடுத்தோம்.
விருப்பு, வெறுப்பின்றி பிற கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் இந்த 4 ஆண்டுகளில் நாங்கள் அனுமதி கேட்டால் உடனே கொடுப்பதில்லை. திமுக ஆட்சியில் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றத்தைதான் நாட வேண்டியுள்ளது. எனவே காவல்துறை பாகுபாடு இன்றி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தினோம்.
கூட்டங்களுக்கான விதி அனைத்துக் கட்சிக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.