தமிழ்நாடு செய்திகள்
null

எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்? - திமுகவிற்கு தூது விடும் பாஜக!

Published On 2025-08-19 10:40 IST   |   Update On 2025-08-19 13:15:00 IST
  • சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று துணை ஜனாதிபதி ஆவது உறுதியாகி உள்ளது.
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெயர் அடிபடுகிறது.

ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவால் தனது துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்த பதவிக்கு அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

இதில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் 21-ந்தேதி (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யாரை களம் இறக்குவது என்று இந்தியா கூட்டணி ஆலோசனை நடத்தி வருகிறது. எனவே இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 872 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 392 எம்.பி.க்களின் ஆதரவை பெறுபவர் புதிய துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார்.

தற்போது பாராளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிர்க்கட்சிகளை விட சுமார் 40 எம்.பி.க்கள் அதிகம் உள்ளனர். எனவே சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று துணை ஜனாதிபதி ஆவது உறுதியாகி உள்ளது. இருப்பினும் தன்கர் பெற்றதை விட இப்போது பாஜக தலைமை தற்போது சற்று பெரிய வெற்றியை எதிர்பார்க்கிறது என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யார்? என்பது குறித்து இன்று பிற்பகல் 12.30 மணிக்கு மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரை எதிர்க்கட்சிகள் வேட்பாளராக நிறுத்த அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக திமுக எம்.பி. திருச்சி சிவாவின் பெயரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெயரும், காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தியின் பெயரும் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் வாக்குகள் பெற வைப்பதற்காக மத்திய மந்திரிகள் ஆதரவு திரட்டும் பணிகளில் ஈடுபட்டனர். அதன்படி மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டார்.

மேலும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களும் தமிழக எம்.பிக்கள் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழர் ஒருவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி திமுகவிற்கு பாஜக தூது விடும் நிலையில், திமுக என்ன முடிவு எடுக்கும் என்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Tags:    

Similar News