தமிழ்நாடு செய்திகள்

பிரதமரிடம் இ.பி.எஸ். அளித்த மனுவில் இடம்பெற்றுள்ள 3 கோரிக்கைகள் என்ன?

Published On 2025-07-27 07:14 IST   |   Update On 2025-07-27 16:06:00 IST
  • தூத்துக்குடி நிகழ்வை முடித்துக்கொண்டு திருச்சி சென்றார் பிரதமர் மோடி.
  • ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடி தனது 4 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்த நிலையில், நேற்று மாலை தூத்துக்குடி வந்தடைந்தார்.

அப்போது பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து விமானத்தில் இருந்து இறங்கினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து, தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

விழாவில் தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டிஆர்பி ராஜா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமர் மோடிக்கு வள்ளுவர் கோட்டம் மாதிரியை நினைவுப் பரிசாக வழங்கினார்.

இந்நிலையில், பிரதமர் மோடி தூத்துக்குடில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். குறிப்பாக, ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

ரூ.450 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வை முடித்துக்கொண்டு திருச்சி சென்றார் பிரதமர் மோடி. இதையடுத்து அவரை, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சில நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது.

அப்போது அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்

இந்த சந்திப்பின் போது கோரிக்கை மனு ஒன்றையும் எடப்பாடி பழனிசாமி , பிரதமர் மோடியிடம் அளித்துள்ளார். அந்த கோரிக்கை மனுவில் இடம் பெற்று இருப்பதாவது:-

*விவசாய கடன் வழங்குவதற்கு சிபில் ஸ்கோர் கேட்பதில் இருந்து வங்கிகள் விவசாயிகளுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும் .

*கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

*தமிழ்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் பிரத்யேக ராணுவ வழித்தடம் ஒன்றை சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சியை இணைத்து செயல்படுத்த வேண்டும்

ஆகிய கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.

இந்த மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, கோரிக்கை மனுவை பரிசீலித்து ஆவண செய்வதாக உறுதி அளித்துள்ளார்.


Full View


Tags:    

Similar News