மரணங்களின் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள நீதிமன்றத்தை நாடுகிறார் விஜய் - வன்னி அரசு
- விஜயை காணவந்த ரசிகர்களும் தொண்டர்களுமாக 39 பேர் மரணித்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.
- தவெகவின் அடுத்த கட்ட தலைவர்கள் கூட பாதிக்கப்பட்ட மக்களோடு நிற்கவில்லை.
கரூர் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு தமிழக வெற்றிக்கழகத்தினர் முறையீடு செய்தனர். கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றும் சி.சி.டி.வி. காட்சி உள்ளிட்ட ஆவணங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்று முறையீட்டனர்.
இதனை தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு எடுக்க நீதிபதி தண்டபாணி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தினர் உயர்நீதிமன்றத்தை நாடியதை விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நடிகர் விஜய் அவர்களை காணவந்த ரசிகர்களும் தொண்டர்களுமாக 39 பேர் மரணித்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.
எமது தலைவர் எழுச்சித்தமிழர் உள்ளிட்ட தலைவர்கள் கரூரை நோக்கி பயணித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஆனால்,நேற்று கரூரிலிருந்தே பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறாமல் அவசரம் அவசரமாக எஸ்கேப்பாகி சென்னை வந்து விட்டார்.
இதுவரை தவெகவின் அடுத்த கட்ட தலைவர்கள் கூட பாதிக்கப்பட்ட மக்களோடு நிற்கவில்லை.
இந்த சூழலில், சிபிஐ விசாரிக்க வேண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளது தவெக. இறந்து போனவர்களின் உடலை கூட இன்னும் அடக்கம் செய்யவில்லை. அவர்களின் கண்ணீர் கூட வடிவது நிற்கவில்லை.
அதற்குள்ளாகவே இந்த மரணங்களின் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள நீதிமன்றத்தை நாடுகிறார் விஜய்.
இது அப்பட்டமான அயோக்கியத்தனம். மக்கள் மன்றத்திற்கு பதில் சொல்ல அஞ்சி, நீதிமன்றத்தை நாடுவது ஒன்றிய பாஜக அரசு காப்பாற்றும் என்னும் நம்பிக்கையில் தானா?" என்று தெரிவித்துள்ளார்.