துணை ஜனாதிபதி தேர்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பேச்சு
- இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
- 392 எம்.பி.க்களின் ஆதரவை பெறுபவர் புதிய துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார்.
சென்னை:
புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
அவர் 21-ந்தேதி (வியா ழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யாரை களம் இறக்குவது என்று இந்தியா கூட்டணி ஆலோசனை நடத்தி வருகிறது. இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆனால் ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்று தெரிய வந்துள்ளது.
எனவே இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 872 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 392 எம்.பி.க்களின் ஆதரவை பெறுபவர் புதிய துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார்.
தற்போது பாராளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிர்க்கட்சிகளை விட சுமார் 40 எம்.பி.க்கள் அதிகம் உள்ளனர். எனவே சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று துணை ஜனாதிபதி ஆவது உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் வாக்குகள் பெற வைப்பதற்காக மத்திய மந்திரிகள் இன்று ஆதரவு திரட்டும் பணிகளில் ஈடுபட்டனர். அதன்படி மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அவர், "சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தி.மு.க. எம்.பி.க்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார். இதே போன்று ஒடிசா மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக்கிடமும் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு திரட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.