தமிழ்நாடு செய்திகள்

காசா இனப் படுகொலைகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்: வைரமுத்து வரவேற்பு

Published On 2025-10-09 10:47 IST   |   Update On 2025-10-09 10:59:00 IST
  • காசாவின் உலர்ந்த வானத்தில் பெய்யும் தமிழ்நாட்டு மழையாகும்
  • மத்திய கிழக்கை நோக்கி எங்கள் வெள்ளைப் புறா

காசா மீது இஸ்ரேல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். காசா இனப்படுகொலைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்தும், அங்கு உடனடியாக போர் நிறுத்தம் தேவை என்பதை வலியுறுத்தியும் தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கூறினார்.

காசா இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதற்கு கவிஞர் வைரமுத்து வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

காசாவில் நிகழும்

இனப்படுகொலைகளுக்கு எதிராகத்

தமிழ்நாடு சட்டமன்றத்தில்

தீர்மானம் நிறைவேற்றப்படும்

என்பது ஒரு நற்செய்தியாகும்;

நம்பிக்கை தருவதாகும்

காசாவின்

உலர்ந்த வானத்தில் பெய்யும்

தமிழ்நாட்டு மழையாகும்

முதலமைச்சர்

மு.க.ஸ்டாலின் அவர்களின்

மனிதாபிமானத்தை

மனம் உள்ளவர்களெல்லாம்

பாராட்டுவார்கள்

காசா ஒரு சிறு பகுதிதான்

41 கி.மீ நீளமும்

10 கி. மீ அகலமும் கொண்ட

ஓர் ஒட்டு நிலம்தான்

ஆனால்,

தண்ணீர் இல்லாத

அந்தப் பாலை நிலத்தில்

ரத்த ஊற்று பீறிடுகிறது

உலகத்தின் கண்களில் விழுந்த

கந்தகத் தூளாக

அது உறுத்திக்கொண்டே இருக்கிறது

முதலில் அந்த மக்கள்

உயிரோடு இருக்க வேண்டும்

இந்தத் தீர்மானம்

சர்வதேசச் சமூகத்தின் மீது

தமிழ்நாடு சட்டமன்றம் காட்டும்

அன்பென்றும் அக்கறையென்றும்

போற்றப்படும்

தீப்பிடித்த வீட்டில்

ஆளுக்கொரு குடம் தண்ணீர்

அள்ளி இறைப்பதுபோல

அனைத்துக் கட்சிகளும்

இந்தத் தீர்மானத்தை

ஆதரிக்கும் என்று நம்புகிறோம்

இது

உலக சமாதானத்துக்கு

எங்கள் பங்கு

மத்திய கிழக்கை நோக்கி

எங்கள் வெள்ளைப் புறா

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News