விஜய் கனவு மண்கோட்டையாக தான் போகும் - வைகோ
- இந்தியாவிற்கு பாரத் என பெயர் சூட்ட பா.ஜ.க. நினைக்கிறது.
- எஸ்.ஐ. ஆர். வைத்து தமிழ்நாட்டில் 75 லட்சம் வாக்குகள் நீக்கப்பட உள்ளது.
மதுரை:
மதுரையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதால் 31 ஆண்டுகளாக ம.தி.மு.க.வை நடத்தி வருகிறேன். முல்லை பெரியாறு, ஸ்டெர்லைட் போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக போராடினேன். நீதிபதிகளை நான் மதிக்கிறேன், ஆனால், நீதிபதிகள் வரம்புக்குள் மட்டுமே பேச வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை ஐகோர்ட்டின் உத்தரவு ஜனநாயகத்துக்கு விரோதமானது.
புதிதாக கட்சியை தொடங்கி உள்ள விஜய் பொதுப் பிரச்சனைகளில் தலையிட்டாரா? அல்லது போராட்டங்கள் நடத்தினாரா? தனிப்பட்ட முறையில் விஜயை நான் மதிக்கிறேன்.
யாரோடு கூட்டு சேர்த்தாலும் தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது. தமிழ் நாட்டில் இந்துத்துவா சக்திகள் உள்ளே நுழைய நினைக்கிறது. எந்த கால கட்டத்திலும் எந்த சக்தியும் இங்கு நுழைய முடியாது. தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
தி.மு.க.வையும், அதன் கூட்டணி கட்சிகளையும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. கர்வத்தோடும், அகந்தையோடும் தி.மு.க.வை துடைத்தெறிவோம் என அமித்ஷா பேசுகிறார். 100 மடங்கு பலம் கொண்டவர்களால் கூட தி.மு.க.வை வீழ்த்த முடியவில்லை. அமித்ஷா நாவை அடக்கி பேச வேண்டும். கட்சிகளை விமர்சனம் செய்யும்போது மிக கவனத்துடன் பேச வேண்டும்.
மத்திய அரசு திட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைத்து பாஜக இந்தியாவை துண்டிக்க பார்க்கிறார்கள். இந்தியாவிற்கு பாரத் என பெயர் சூட்ட பா.ஜ.க. நினைக்கிறது. தி.மு.க. கூட்டணியில் சிறு சலசலப்பு கூட கிடையாது. மீண்டும் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எஸ்.ஐ. ஆர். வைத்து தமிழ்நாட்டில் 75 லட்சம் வாக்குகள் நீக்கப்பட உள்ளது. அதே எஸ்.ஐ.ஆரை வைத்து 65 லட்சம் வெளிமாநில வாக்குகள் தமிழ்நாட்டில் சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆசை, கனவு எனக்கு கிடையாது, நான் என்றும் முதல்வர் ஆவேன் என பேசியதில்லை. தி.மு.க.-த.வெ.க. இடையே தான் போட்டி என சினிமாவில் பேசும் வசனங்களை போல் பேசி வருகிறார் விஜய். விஜயின் கனவு நினைவாகாது. காகித கப்பலில் கரையை கடக்க முயல்கிறார் விஜய். ஆகாய வெளியில் மணக்கோட்டையை கட்டுகிறார் விஜய். அது வெறும் மண் கோட்டையாக தான் போகும்.
இவ்வாறு அவர் கூறினார்.