பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு துணை நிற்க வேண்டும்- வைகோ
- உச்ச நீதிமன்ற தீர்ப்பால், தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
- அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவு, அனைவரையும் நிலை குலைய வைத்துள்ளது.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
"அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற வேண்டும் என்றால், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதே நேரத்தில், ஓய்வு பெறும் வயதை எட்டுவதற்கு ஐந்தாண்டுகள் மட்டுமே இருக்கக்கூடிய ஆசிரியர்கள் பணியில் தொடரலாம்.
5 ஆண்டுகளுக்கு அதிகமாக இருக்கக்கூடிய அத்தனை ஆசிரியர்களும் தொடர்ந்து ஆசிரியராக பணியில் தொடர, ஆசிரியர் தகுதித் தேர்வில், நிச்சயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால், தமிழகத்தில் அரசு பணியில் உள்ள, 85,000 ஆசிரியர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பால், தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவு, அனைவரையும் நிலை குலைய வைத்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் பாதிக்கப்படாமல் இருக்க ஆசிரியர்களுக்குத் துணை நிற்போம் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருப்பது ஆறுதல் தருகிறது.
எதிர்காலம் பற்றிய கவலை சூழ்ந்த நிலையில் கற்பித்தல் பணியை மேற்கொள்ளும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழ்நாடு அரசு உடனடியாக தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.