தமிழ்நாடு செய்திகள்

அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூர் ஆடை ஏற்றுமதி ரூ.12000 கோடி அளவில் பாதிக்கும்- ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர்

Published On 2025-08-07 10:16 IST   |   Update On 2025-08-07 10:16:00 IST
  • இந்த வரி உயர்வால் அமெரிக்க நுகர்வோர் தான் பாதிக்கப்படுவார்கள்.
  • அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூரில் பின்னலாடை தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்படாது.

திருப்பூர்:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு 25 சதவீத வரியை உயர்த்திய நிலையில் கூடுதலாக 25 சதவீத வரியை உயர்த்தி அறிவித்துள்ளார். இதனால் இந்திய பொருட்கள் விலை அமெரிக்காவில் உயர்வதன் காரணமாக வர்த்தகம் பெருமளவில் பாதிக்கும்.

குறிப்பாக அமெரிக்காவுக்கான பின்னலாடைகள் ஏற்றுமதி ரூ.12,000 கோடி அளவில் பாதிக்கும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இந்த வரி விதிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது. மத்திய அரசு இது தொடர்பாக உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும். இந்த வரி உயர்வால் அமெரிக்க நுகர்வோர் தான் பாதிக்கப்படுவார்கள். 100 ரூபாய் ஆடைகள் இனி ரூ.150ஆக உயரும். அவற்றை வாங்க முடியாமல் அமெரிக்க நுகர்வோர்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.

இந்தியாவுக்கான வரி உயர்வை போட்டி நாடுகளான பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்தும் பட்சத்தில் நமக்கு கிடைக்கக்கூடிய அமெரிக்க ஆர்டர்கள் பாதிக்கும்.

அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூரில் பின்னலாடை தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்படாது. இங்கிலாந்துடன் வரியில்லா ஒப்பந்தம் செய்து கொண்டதால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிக அளவு ஆர்டர்கள் திருப்பூருக்கு கிடைக்கும். இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளதே தவிர குறைவதற்கு வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News