தமிழ்நாடு செய்திகள்

சென்னை மாநகராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நாளை தொடக்கம்- முழு விவரம்

Published On 2025-07-14 08:33 IST   |   Update On 2025-07-14 08:33:00 IST
  • ஒவ்வொரு வார்டிலும் தலா 2 முகாம்கள் வீதம் 200 வார்டுகளிலும் மொத்தம் 400 முகாம்கள் நடைபெற உள்ளது.
  • ஆகஸ்டு 14-ந்தேதி வரை 109 வார்டுகளில் முகாம் நடைபெற உள்ளது.

சென்னை:

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முகாமை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார். நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் முகாம் நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நாளை முதல் அக்டோபர் மாதம் வரை 15 மண்டலங்களிலும் உள்ள ஒவ்வொரு வார்டிலும் தலா 2 முகாம்கள் வீதம் 200 வார்டுகளிலும் மொத்தம் 400 முகாம்கள் நடைபெற உள்ளது.

முதல்கட்டமாக 109 முகாம்கள் நடைபெற உள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 6 வார்டுகள் வீதம் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடைபெறும். இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு வார்டிலும் முகாம் நடைபெறுவதற்கு 7 நாட்களுக்கு முன்பாக தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளடக்கிய விண்ணப்ப படிவங்கள் மற்றும் 13 அரசுத்துறைகள் மூலம் வழங்கப்பட உள்ள சேவைகள் குறித்த முழு விவரங்கள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்த தகவல் கையேடு வழங்கப்படும்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருந்தால் தங்களது வார்டுகளில் நடைபெறும் முகாமில் நேரடியாக சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம். முகாம்களில் பெறப்படும் மக்களின் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகள் வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடைபெறும் நாட்களில், வார்டுகளில் உள்ள பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதன்படி நாளை 25, 38, 76, 109, 114, 143, 168 ஆகிய 7 வார்டுகளிலும், 16-ந்தேதி 1, 20, 79, 94, 167, 179 ஆகிய 6 வார்டுகளிலும் முகாம் நடைபெறும். 17-ந்தேதி 32, 49, 80, 130, 184, 192 ஆகிய 6 வார்டுகளிலும், 18-ந்தேதி 15, 34, 64, 110, 144, 156 ஆகிய 6 வார்டுகளிலும் திட்ட முகாம் நடைபெறும். அதன்படி, ஆகஸ்டு 14-ந்தேதி வரை 109 வார்டுகளில் முகாம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News