தமிழ்நாடு செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் பாளையங்கோட்டையில் போட்டியிட வேண்டும்- தி.மு.க. நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

Published On 2025-07-14 15:07 IST   |   Update On 2025-07-14 15:07:00 IST
  • பொதுவாக கட்சி தலைவர்கள் தங்களுக்கு சாதகமான அதிக செல்வாக்கு உள்ள தொகுதியை தேர்ந்தெடுப்பது வழக்கம்.
  • உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டால் தமிழக அளவில் பாளையங்கோட்டை தொகுதி வி.ஐ.பி. தொகுதியாக மாறும்.

நெல்லை:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சு, தேர்தல் பிரசாரம் என தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்கி உள்ளனர்.

குறிப்பாக ஆளுங்கட்சியான தி.மு.க. சார்பில் முதலமைச்சரும், கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபுறம் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.

இது போன்ற சூழ்நிலையில் துணை முதலமைச்சரும், தி.மு.க. மாநில இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின், நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என நிர்வாகி ஒருவர் நெல்லையில் ஒட்டி உள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க.வின் 30-வது வார்டு செயலாளர் தென்கரை முத்து சார்பில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பும், கனவும் நிறைவேற உதயநிதி ஸ்டாலின் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும். வேண்டும், வேண்டும் உதய் அண்ணா வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த போஸ்டர் நெல்லை மாநகரம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உதயநிதி ஸ்டாலின் தற்போது சென்னை சேப்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். பொதுவாக கட்சி தலைவர்கள் தங்களுக்கு சாதகமான அதிக செல்வாக்கு உள்ள தொகுதியை தேர்ந்தெடுப்பது வழக்கம்.

அந்த வகையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்ற சேப்பாக்கம் தொகுதி தி.மு.க.வின் கோட்டையாக இருந்து வருகிறது. அதே சமயம் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியும் தொடர்ந்து பலமுறை தி.மு.க வெற்றி பெற்று வரும் தொகுதியாகும். இந்த தொகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ச்சியாக 5 முறை தி.மு.க. வேட்பாளர்களே வெற்றி பெற்று வருகின்றனர்.

பொதுவாக பாளையங்கோட்டை தொகுதி என்றாலே தி.மு.க. வின் கோட்டை என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் அங்கு போட்டியிட வேண்டும் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் அவ்வாறு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டால் தமிழக அளவில் பாளையங்கோட்டை தொகுதி வி.ஐ.பி. தொகுதியாக மாறும்.

Tags:    

Similar News