அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை- கைது செய்யப்பட்ட த.வெ.க. செயலாளரின் மனைவி கண்ணீர்
- உண்மையில் விஜயின் உண்மையான தொண்டர்களோ, ரசிகர்களோ அப்படி செய்ய வாய்ப்பில்லை.
- ஒருவேளை காவலாளி அஜித்குமார் போன்று என் கணவரையும் போலீசார் பயங்கரம் ஆக தாக்குவார்களோ என்ற பயம் உள்ளது.
கரூர்:
கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டது தொடர்பாக அவரது மனைவி ராணி கண்ணீருடன் கூறியதாவது:-
எங்கள் குடும்பம் முழுவதுமே விஜயின் தீவிர ரசிகர்கள். விஜய் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்தே எனது கணவர் அவரின் ரசிகராக இருந்து வருகிறார். கடந்த 27-ம் தேதி பிரசாரம் நடைபெறுவதற்கு முதல் நாள் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு கிளம்பி சென்றவர்தான். இப்போது வரை அவர் வீடு திரும்பவில்லை. எங்கு இருக்கிறார்... எப்படி இருக்கிறார் என்பது தெரியவில்லை.
ஆனால், அவர் கைது செய்யப்பட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வந்தது. நானும் விஜயின் தீவிர ரசிகை. பிரசாரம் நடைபெற்ற இடத்திற்கு நானும் எனது 2 மகன்களும் சென்றிருந்தோம். எனது பிள்ளைகளை மிகவும் பத்திரமான இடத்தில் அமர வைத்துவிட்டு என் தோழிகளுடன் நடனமாடி செல்பி எடுத்து உற்சாகமாகத்தான் இருந்தோம். அங்கு எல்லோருமே அப்டித்தான் இருந்தார்கள்.
விஜய் பிரசார இடத்திற்கு வரும் வரை அங்கு எந்த பிரச்சினையும் இருந்ததாக தெரியவில்லை. அவர் பிரசார வாகனம் வந்து நின்று பேச ஆரம்பித்த பிறகுதான் சலசலப்பு ஆரம்பித்தது. செருப்பு வீச்சு நடந்த பிறகு ஒருத்தர் ஒருவரை தள்ளி விடுவது, அடிப்பது போன்ற நிகழ்வுகள் எல்லாம் தொடங்கியது.
உண்மையில் விஜயின் உண்மையான தொண்டர்களோ, ரசிகர்களோ அப்படி செய்ய வாய்ப்பில்லை. வேண்டும் என்றே ஒரு கும்பல் உள்ளே இறக்கிவிடப்பட்டு அடிதடி நடத்தியது போல்தான் இருந்தது. இறந்தவர்களில் பெரும்பாலானோரை கழுத்தில் மிதித்தும், சாக்கடை பள்ளத்தில் தள்ளியும், அவர்கள் மீது விழுந்து மிதித்தும்தான் கொன்றார்கள்.
சம்பவ இடத்தில் இருந்து நான் பார்த்தேன் என்பதை விட எனக்கும் அப்படியான ஒரு அனுபவம்தான் கிடைத்தது. என்னையும் அருகில் இருந்த சாக்கடை பள்ளத்தில் தள்ளி கழுத்தில் கால் வைத்து மிதித்தார்கள். மிகவும் சிரமப்பட்டுதான் தப்பித்து வந்தேன். நானும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நேற்றுதான் வீடு திரும்பினேன்.
என் கணவர் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்ததே தவிர அது தொடர்பான வீடியோ எதுவும் வரவில்லை. பிரசாரம் முடிவதற்கு முன்பு வரை அவர் எங்களிடம் பேசிக்கொண்டுதான் இருந்தார். ஆனால், இப்போது அவரை பற்றி எந்த தகவலும் எனக்கு தெரியவில்லை. என்னிடம் இதுவரை காவல்துறையும் எந்த தகவலும் சொல்லவில்லை.
ஒருவேளை காவலாளி அஜித்குமார் போன்று என் கணவரையும் போலீசார் பயங்கரம் ஆக தாக்குவார்களோ என்ற பயம் உள்ளது. நான் அரசுக்கும் காவல்துறைக்கும் ஒரே ஒரு வேண்டுகோள்தான் வைக்கிறேன். எனக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். தயவு செய்து என் கணவரை எங்கு வைத்து இருக்கிறீர்கள்.. அவர் எப்படி இருக்கிறார் என்பதை மட்டும் சொல்லுங்கள். அவரை என் கண்ணில் காட்டுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.