தமிழ்நாடு செய்திகள்

விஜய் குறித்து ஒருமையில் பேச்சு: சீமான் மீது போலீசில் புகார்

Published On 2025-09-17 11:38 IST   |   Update On 2025-09-17 11:38:00 IST
  • நாம் தமிழர் கட்சி மற்றும் த.வெ.க கட்சி நிர்வாகிகள் இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
  • தொடர்ந்து எங்களது கட்சித் தலைவரை அவமரியாதையாக பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேட்டுப்பாளையம்:

கோவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி சார்பில் நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது சீமான், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார். இதற்கு த.வெ.கவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் த.வெ.க தலைவர் விஜய் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் மேட்டுப்பாளையம் நகர செயலாளர் காஜா தலைமையில் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பதவாது:-

கோவையில் அண்மையில் நடந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில், அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், த.வெ.க கட்சி தலைவரான நடிகர் விஜய்யை தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியும், ஒருமையிலும் பேசியதாகவும், இதனால் நாம் தமிழர் கட்சி மற்றும் த.வெ.க கட்சி நிர்வாகிகள் இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்ந்து எங்களது கட்சித் தலைவரை அவமரியாதையாக பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோதல் போக்கை உருவாக்கும் வகையில் பேசி வரும் அவர் மீது சட்டம் ஒழுங்கு சீர்குலைவு பிரச்சனை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News