பெத்த அப்பா என்ன கூட்டிட்டு வரல... மகனின் இறப்பு சான்றிதழை காட்டிய பின்பு விஜயை பார்க்க அனுமதி
- என் மகனுக்கு 5 வயது இருக்கும்போதே மனைவிக்கு கண் தெரியாமல் போனது.
- நிகழ்ச்சி ரத்தானதாக என்னிடம் சொல்லிவிட்டு என் மனைவியை அழைத்து வந்து உள்ளார்கள்.
கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்தார். அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் வகையில் விஜயின் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்ததையடுத்து அவர்கள் நேற்று இரவு மாமல்லபுரம் வந்தடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி தாலுகாவை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் மோகன் (19) கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். மோகனின் தந்தையை த.வெ.க.வினர் அழைத்து வராத நிலையில் அவர் தனியாக மகாபலிபுரம் வந்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை மாமல்லபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜயை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு என் மனைவி, உறவினர்களை அழைத்து வந்துள்ளார்கள். பெத்த அப்பனான என்னை கூட்டிக்கொண்டு வரவில்லை.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல என்னை அனுமதிக்கவில்லை. கட்சிக்காரர்கள் சொன்னால்தான் உள்ளே செல்ல அனுமதிக்க முடியும் என்று சொல்லி விட்டார்கள். மாவட்ட செயலாளருக்கு போன் செய்தால் அந்த மாதிரி கூட்டமே நடக்கவில்லை என்று சொல்கிறார்.
என் மனைவிக்கு கண் தெரியாது. கல்யாணம் நடந்து 35 வருஷம் ஆகிறது. 13 வருஷமாக அவருக்கு கண் தெரிவதில்லை. என் மகனுக்கு 5 வயது இருக்கும்போதே மனைவிக்கு கண் தெரியாமல் போனது. அப்போது இருந்தே நான் தான் எல்லாமே பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
இந்த பணம் வந்தவுடன் மனைவியின் உறவினர்கள் அவர்கள் கையாள்வதற்காக என்னை ஒதுக்கிவிட்டு, எனக்கு தெரியாமல் மனைவியை அழைத்து வந்து விட்டார்கள்.
நிகழ்ச்சி ரத்தானதாக என்னிடம் சொல்லிவிட்டு என் மனைவியை அழைத்து வந்து உள்ளார்கள். இப்போது நான் தனியாக பஸ் பிடித்து வந்துள்ளேன். என்னை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. கட்சிகாரர்கள் சொல்ல வேண்டும் என்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த மோகன் என்பவரின் தந்தையை ஓட்டலுக்குள் அனுமதிக்காததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஓட்டல் வாசலில் காத்திருந்த கந்தசாமி, அவர் எடுத்து வந்த மகனின் இறப்பு சான்றிதழை காட்டிய பின்பு அவருக்கு உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. த.வெ.க.வினர் அவரை உள்ளே அழைத்து சென்றனர்.