கல்வி விருது விழா - மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் உரையாடிய விஜய்
- 88 சட்டமன்ற தொகுதிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பங்கேற்கிறார்கள்.
- 600 மாணவ-மாணவிகளுக்கு தங்க நாணயங்கள் வழங்கப்பட இருக்கிறது.
சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, 12-ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேரில் அழைத்து பாராட்டி, பரிசளித்து வருகிறார். 2025-ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 3 கட்டங்களாக நடக்க உள்ளது. முதல் கட்ட பரிசளிப்பு விழா இன்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறுகிறது.
மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு வைர கம்மலும், மாணவருக்கு வைர மோதிரமும் வழங்கப்பட உள்ளது. 2, 3-ம் இடங்களை பிடித்தவர்களுக்கு தங்க நாணயமும் வழங்கப்பட உள்ளது. அதன்படி 600 மாணவ-மாணவிகளுக்கு தங்க நாணயங்கள் வழங்கப்பட இருக்கிறது.
முதல் கட்ட பரிசளிப்பு விழாவில், அரியலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, சென்னை, திண்டுக்கல், திருவள்ளூர், தேனி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட 88 சட்டமன்ற தொகுதிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பங்கேற்கிறார்கள்.
இந்த நிலையில் கல்வி விருது வழங்கும் விழாவில் பங்கேற்க சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து த.வெ.க. தலைவர் விஜய் புறப்பட்டு மாமல்லபுரத்தில் விழா நடைபெறும் ஓட்டலுக்கு வந்தார். விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரங்கிற்குள் நுழைந்த விஜய், அங்கு முன்பகுதியில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் அமர்ந்து அவர்களுடன் சிறிதுநேரம் உரையாடினார்.
இதையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதைத்தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் உரையாடுகிறார்.