தமிழ்நாடு செய்திகள்

மதுரையில் த.வெ.க. மாநாடு - 10 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல்

Published On 2025-07-23 14:34 IST   |   Update On 2025-07-23 14:34:00 IST
  • இதுவரை எந்த அரசியல் கட்சியும் நடத்திடாத அளவிற்கு இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை:

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் அடுத்த மாதம் 25-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக மதுரை பெருங்குடி அருகே பாரைப் பத்தி பகுதியில் சுமார் 506 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாட்டு பந்தல் மற்றும் மேடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த 16-ந்தேதி கால்கோள் விழா நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பு பூஜை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து மாநாட்டு பந்தல் அமைப்பதற்காக ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இதற்காக ஜே.சி.பி. உள்ளிட்ட வாகனங்கள் மூலம் மாநாட்டு பகுதிகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அனைத்து பகுதிகளும் சரி செய்யப்பட்டு பந்தல் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான ராட்சத குழாய்கள், இரும்பு தடுப்புகள், ஷீட்டுகள் போன்றவை அந்த பகுதிக்கு கனரக வாகனங்களில் வந்து இறங்கிய வண்ணம் உள்ளது.

தினந்தோறும் கனரக வாகனங்களில் மாநாட்டு பந்தலுக்கு தேவையான இரும்பு கம்பிகள் மற்றும் சீட்டுகள் வருகிறது. இதனை 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதுகாப்புடன் ஆங்காங்கே இறக்கி வருகின்றனர். தற்போது முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த வாரம் முதல் பந்தல் அமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று தெரியவந்துள்ளது. இதற்காக த.வெ.க. மாநில பொதுச் செயலாளர் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் அடுத்த வாரம் முதல் மதுரையில் முகாமிட்டு மாநாட்டு பணிகளை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இதுவரை எந்த அரசியல் கட்சியும் நடத்திடாத அளவிற்கு இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டு மேடை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் அமைய உள்ளது. இதற்கான அதில் தனித்துவம் மிக்க வல்லுனர்கள் நியமிக்கப்பட்டு மேடை உருவாக்குவதற்கு தேவையான வரைபடம் மற்றும் தொழில் நுட்பங்களை செய்து வருகிறார்கள்.

மேலும் அந்த பகுதியில் சுமார் 10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட உள்ளது. இதற்காக இரும்பு போஸ்டுகள், ராட்சத கிரேன் மூலம் நடப்படுகிறது. மற்றும் அதற்கான வெல்டிங் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளது. மாநாட்டு பந்தலில் சுமார் 10 லட்சம் நாற்காலிகள் போடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர சிறப்பு அழைப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகளும் அமருவதற்கான தனியாக இருக்கை வசதியும் செய்யப்படுகிறது.

மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு சுடச்சுட அறுசுவை உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய தேவையான அனைத்து பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளன. உணவு தயாரிக்க சிறப்பு குழுவினர் பணியமர்த்தப்படுகிறார்கள். இதுதவிர சாப்பாடு கூடம், குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்வதற்கு தனித் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுவினர் பணிகளை தொடங்கியுள்ளனர்.

மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வாகன நிறுத்துமிடம் பல ஏக்கர் பரப்பளவில் செம்மைப்படுத்தி தயார் செய்யப்பட்டு வருகின்றது. முக்கிய நிர்வாகிகளின் வாகனம் நிறுத்துவதற்கு மேடை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் வரும் வாகனங்களை மாநாட்டு திடல் உள்ளிட்ட 6 இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெறும் த.வெ.க. மாநாடு தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தவேண்டும் என்பது தான் த.வெ.க. நிர்வாகிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

மதுரையில் நடைபெறும் இந்த மாநாட்டில் மதுரையில் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் இருந்து சுமார் 5,000 பேர் மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். எனவே மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து மட்டும் சுமார் 5 லட்சம் பேர் மாநாட்டில் பங்கேற்பதற்கு தேவையான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்துள்ளனர். எனவே தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடனும், உற்சாகத்துடனும் மதுரை மாநாட்டில் பங்கேற்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள்.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக த.வெ.க. தலைவர் விஜய் ஒரு நாள் முன்னதாக ஆகஸ்ட் 24-ந்தேதியே மதுரை வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் வரும் நேரம் மற்றும் தங்குமிடம் ரகசியமாக வைக்கப் பட்டுள்ளது. மாநாடு தொடங்குவதற்கு முன்னதாகவே 25-ந்தேதி அதிகாலையில் மாநாட்டு பகுதிக்கு விஜய் வந்து விடுவார். எனவே தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மாநாட் டில் கலந்து கொள்வதற்கு எந்தவிதமான போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண கால தாமதம் ஏற்படாது என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெறுவதால் அது அரசியல் ரீதியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News