தமிழ்நாடு செய்திகள்

தக் லைஃப் படத்திற்கு சிக்கல்? மன்னிப்பு கேட்காவிட்டால் கமல்ஹாசன் படத்திற்கு தடை- கர்நாடக அமைச்சர் எச்சரிக்கை

Published On 2025-05-29 15:11 IST   |   Update On 2025-05-29 15:11:00 IST
  • தக் லைஃப் பட போஸ்டர்களை கிழித்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
  • கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் கண்டனம் தெரிவித்தார்.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தக் லைஃப் பட விழா நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் கமல்ஹாசன் பேசும் போது தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக பேசினார். இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

கமல்ஹாசனை கண்டித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் கன்னட அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மேலும், தக் லைஃப் பட போஸ்டர்களை கிழித்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் கண்டனம் தெரிவித்தார்.

இதற்கிடையே கர்நாடக கலாச்சாரஅமைச்சர் சிவராஜ் தங்கட்சி கூறியதாவது:-

கன்னட நிலம், நீர், மற்றும் மொழி பிரச்சினையில் ஈடுபட்டுள்ள எந்த வொரு பெரிய நபரையும் பொறுத்து கொள்வது என்ற கேள்விக்கே இடமில்லை. கமல்ஹாசன் உடனடியாக மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவரது அனைத்து படங்களும் மாநிலத்தில் தடை செய்யப்படும்.

நடிப்பதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும் நம் மொழி தேவை. இப்போது விளம்பரத்துக்காக இதைப்பற்றி பேசுகிறீர்களா? முன்னதாக சோனுநிகம் கன்னடர்களை பற்றி இதே போல் பேசினார். பின்னர் மன்னிப்பு கேட்டார். அவர்கள் அனைவருக்கும் பாடம் கற்பிக்க வேண்டும்.

கமல்ஹாசன் பல கன்னட படங்களில் நடித்துள்ளார். ஒரு மூத்த நடிகர் இது போன்ற அறிக்கையை வெளியிடுவது சரியல்ல. அவரது படங்கள் வெளியிடுவதை தடை செய்ய திரைப்பட வர்த்தக சபைக்கும் கடிதம் எழுதப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர் அசோகா கூறுகையில்," கன்னட மொழியை அவமதித்த கமலின் புதிய அல்லது பழைய படங்களை திரையிட கன்னடர்கள் அனுமதிக்கக்கூடாது.

அரசாங்கமும், கன்னட ஆதரவு அமைப்புகளும் இந்த படங்களை புறக்கணிக்க வேண்டும். கமல்ஹாசன் பல கன்னட படங்களில் நடித்துள்ளார். அவர் பல தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்துள்ளார்.

கன்னட திரைப்பட தயாரிப்பாளர்களின் கடனை அடைக்க அவர் நியாயமாக பேசியிருக்க வேண்டும். அதற்கு மாறாக அவர் கன்னடத்தை அவமதித்துள்ளார். அவரது செயல் சகிக்க முடியாதது" என்றார்.

Tags:    

Similar News