தமிழ்நாடு செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

Published On 2025-04-15 15:10 IST   |   Update On 2025-04-15 15:10:00 IST
  • ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது.
  • இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது.

சென்னை:

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இதற்கு தடை கோரி ராஜேந்திர பாலாஜி சார்பில் வக்கீல் ஏ.வேலன் தாக்கல் செய்த மேலமுறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பங்கஜ் மித்தல், எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மாதம் 17-ம் தேதி விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் பதிவுசெய்து கொண்ட சுப்ரீம் கோர்ட், ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

மேலும், இரு வாரங்களுக்குள் குற்றப்பத்திரிக்கையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கவர்னருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என உத்தரவிட்டது. மொழியாக்கம் கிடைக்கப் பெற்ற உடனே ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி தமிழ்நாடு அரசு கடிதம்மீது கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்தது.

இந்நிலையில், ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

கவர்னரின் ஒப்புதலை அடுத்து ஓரிரு நாட்களில் அவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News