இது வெறும் தொடக்கம்தான்..! பினராயி விஜயன் எக்ஸ் தள பதிவிற்கு மு.க. ஸ்டாலின் பதில்
- உச்சநீதிமன்ற தீர்ப்பு மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் முதல் படியைக் குறிக்கிறது.
- கூட்டாட்சி மற்றும் மக்களின் விருப்பத்திற்கான நமது தொடர்ச்சியான போராட்டத்தில் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.
மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தன்னிச்சையாக செயல்பட மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கினர். இது தமிழக அரசுக்கு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இந்த தீர்ப்பு தொடர்பாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் எக்ஸ் பக்க பதிவில் "தமிழ்நாடு ஆளுநர் மசோதாக்களை நிறைவேற்றுவதில் தாமதம் செய்தது குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு, கூட்டாட்சிக் கொள்கைகள் மற்றும் ஜனநாயக மதிப்பை வரலாற்று ரீதியாக மீண்டும் உறுதிப்படுத்துவதாகும்.
இது தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துகிறது. கடுமையான காலக்கெடுவை நிர்ணயிக்கிறது. மேலும் மக்களின் விருப்பத்தை தடுக்க ஆளுநர்களின் அரசியல் தலையீடுகளுக்கு எதிராக ஒரு வலுவான செய்தியை அனுப்புகிறது. ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்டமன்றத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கான கேரளாவின் நிலைப்பாடு மற்றும் நடந்து வரும் சட்டப்போராட்டத்தின் ஒரு உறுதியான நிரூபணம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளிக்கும் வகையில் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநாட்டில் நாம் விவாதித்தது போல, இந்தத் தீர்ப்பு மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் முதல் படியைக் குறிக்கிறது. ஆனால் இது வெறும் ஆரம்பம்தான். கூட்டாட்சி மற்றும் மக்களின் விருப்பத்திற்கான நமது தொடர்ச்சியான போராட்டத்தில் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.