தமிழ்நாடு செய்திகள்

டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் நீர் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-06-15 18:22 IST   |   Update On 2025-06-15 18:22:00 IST
  • தஞ்சை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
  • மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சென்று அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறார்.

அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவது பற்றி அரசு உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துவதோடு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

அதன்படி 2 நாள் பயணமாக இன்றும் நாளையும் (15, 16-ந்தேதிகள்) தஞ்சை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் கல்லணைக்கு இன்று வந்து சேருகிறது. இந்த நிலையில் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கல்லணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் புறப்பட்டு திருச்சிக்கு பகல் 12.15 மணிக்கு சென்றார். அங்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி உள்ளிட்டோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.

வரவேற்பை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக காரில் கல்லணைக்கு சென்றடைந்தார். அங்குள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி இருக்கும் அவர் இன்று மாலை 5 மணியளவில் கல்லணையை திறந்து வைத்தார். இதற்காக கல்லணையின் மதகுகள் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டு உள்ளது.

கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆறுகள் மூலம் காவிரி நீரை பகிர்ந்து அளிக்கும் வகையில் தண்ணீரை திறந்துவிட்டு மலர்களையும், நெல்மணிகளையும் தூவினார்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் செல்கிறார். அங்கு சுற்றுலா மாளிகையில் அவர் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.

பின்னர் அவர் சுற்றுலா மாளிகையில் இருந்து 2 கி.மீ. தூரம் ரோடுஷோவாக பழைய பஸ்நிலையம் வரை பொதுமக்களை சந்தித்தவாறு, மனுக்களை பெற்று கொண்டு நடந்து செல்கிறார்.

அதைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் சுற்றுலா மாளிகை வந்து இரவு தங்குகிறார்.

Tags:    

Similar News