சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள வியூகம்: அ.தி.மு.க- தமிழக பா.ஜ.க. தலைவர்கள் விரைவில் நேரடி பேச்சுவார்த்தை
- பாராளுமன்ற தேர்தலின் போது கூட்டணி முறிவால் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் மாறி மாறி விமர்சித்துக் கொண்டனர்.
- சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோற்பதற்கு முக்கிய காரணமாகி விட்டது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பலர் தெரிவித்தனர்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தி.மு.க. கூட்டணியை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். இதற்காக பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கு அ.தி.மு.க. திட்டமிட்டு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி. இது தமிழகத்தின் நலன்களை காப்பதற்கான சந்திப்பு என்றும் கூட்டணி பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆனால் மத்திய மந்திரி அமித்ஷாவோ தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளிப்படையாக அறிவித்து விட்டார். இதன் மூலம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்தித்த அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலின் போது கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதன் காரணமாக 2 கட்சிகளுமே தனித் தனி அணியை உருவாக்கி போட்டியிட்டு தோல்வியையே தழுவின. அது போன்ற நிலை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் 2 கட்சி தலைவர்களும் உறுதியோடு உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலின் போது கூட்டணி முறிவால் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் மாறி மாறி விமர்சித்துக் கொண்டனர். பா.ஜ.க.வால் தான் சிறுபான்மையினர் ஓட்டுகளை பெற முடியாமல் போய் விட்டது. அதுவே சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோற்பதற்கு முக்கிய காரணமாகி விட்டது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பலர் தெரிவித்தனர்.
இதற்கு பா.ஜ.க. தலைவர்களும் பதிலடி கொடுத்திருந்தனர். இது போன்ற காரணங்களால் 2 கட்சி தலைவர்களிடையே மனக்கசப்பும் ஏற்பட்டது. தற்போது மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதால் அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே 2 கட்சிகளின் விருப்பமாக உள்ளது.
இதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என டெல்லி பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது. இதன்படி 2 கட்சிகளை சேர்ந்தவர்களும் கூட்டணி விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கக் கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி உள்ளநிலையில் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளையும் சுமூகமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதால் அதற்கான சூழலை உருவாக்குவதில் தமிழக தலைவர்கள் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்றும் டெல்லி பா.ஜ.க. தலைமை தெரிவித்துள்ளது.
இப்படி அ.தி.மு.க.-பா.ஜ.க. தலைவர்கள் இடையே இணக்கமான சூழலை உருவாக்கி விட்டு அதன் பிறகே 2-வது கட்ட கூட்டணி பேச்சுவார்த் தையை நேரடியாக நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெறும் பட்சத்தில் அது வலிமையான கூட்டணியாக நிச்சயம் மாறும் என்றே அ.தி.மு.க., பா.ஜ.க. தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
இப்படி அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரப்படுத்தப்பட்டு இருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.