'தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளைமுதல் விருப்ப மனு அளிக்கலாம்' - காங்கிரஸ் அறிவிப்பு!
- 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது.
- நாளை முதல் (10.12.2025) வருகிற 15.12.2025 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்திலோ அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலோ பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக -பாஜக கூட்டணி ஆகியவை அப்படியே தொடருமா, மாறாக இவற்றில் இடம்பெற்றுள்ள கட்சிகள் விலகுமா என யூகங்களும், பேச்சுகளும் இப்போதே அடிபட தொடங்கியுள்ளன.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளைமுதல் விருப்பமனு அளிக்கலாம் என மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது. கட்டணமில்லா விருப்ப மனு படிவத்தினை நாளை முதல் (10.12.2025) வருகிற 15.12.2025 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்திலோ அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலோ பெற்றுக் கொள்ளலாம்.
நேரடியாக வந்து விருப்ப மனு படிவத்தை பெற இயலாதவர்கள் இந்த https://drive.google.com/drive/folders/1G7I1MOz3nNkgXGohJKlneblXZxDBaGVh லிங்க்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தாங்கள் போட்டியிட விரும்பும் சட்டமன்ற தொகுதியை குறிப்பிட்டு விருப்ப மனு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்தும், தனியாக இணைக்கப்பட வேண்டிய இதர விபரங்களை விருப்ப மனுவுடன் இணைத்தும் இறுதி நாளான 15.12.2025 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.