அத்துமீறு என்பதற்கான அர்த்தம் புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர் - அன்புமணியை விமர்சித்த திருமாவளவன்
- இளைஞர்களை அத்துமீறு என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன் என்று அன்புமணி பேசினார்.
- அத்துமீறு என்ற சொல்லுக்குள் பல அரசியல் உள்ளது என்று திருமாவளவன் தெரிவித்தார்.
பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "இளைஞர்களை அத்துமீறு என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். படித்து வேலைக்கு போ அதன் பிறகு கட்சிக்கு வா. முதலில் குடும்பத்தை பார், என்னுடைய தம்பிகள் ஒரு வழக்கு கூட வாங்க கூடாது. ஐயா உங்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்துள்ளார் அதை பயன்படுத்தி படித்து வேலைக்கு செல்லுங்கள்" என்று பேசினார்.
விசிக தலைவர் திருமாவளவனின் முழக்கமான அத்துமீறு என்பதை குறிப்பிட்டு அன்புமணி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அத்துமீறு என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பது புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர் என்று அன்புமணிக்கு திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "அமைப்பாவதால் மட்டும் தான் அத்துமீற முடியும். அத்துமீறலால் மட்டுமே அடக்குமுறைகள் உடையும் என்று 1991-92 காலகட்டத்தில் நான் முழக்கம் எழுதினேன். தனியாளாக அத்துமீற முடியாது. அமைப்பாக இருந்தால் தான் அத்துமீற முடியும். தனியாளாக கோவிலுக்குள் நுழைய முற்பட்டால் விட மாட்டார்கள். ஆனால் அமைப்பாக திரண்டு சென்றால் அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது.
இந்த அத்துமீறலுக்கு என்ன பொருள் என்பது புரியாமல் அத்துமீறி என்று சொல்ல மாட்டேன் என்று சிலர் கலாய்க்கின்றனர். அத்துமீறு என்ற சொல்லுக்குள் பல அரசியல் உள்ளது. அது ஒரு தொலைநோக்கு பார்வை, 2000 ஆண்டுகால அடிமைத்தளையை உடைத்தெறியக்கூடியது அது. இந்த முழக்கம் ஒரு சாதிக்கு மட்டும் உரியது கிடையாது.
நடக்கக்கூடாது என்றால் நடப்போம். பேச கூடாது என்று பேசுவோம். இந்த இடத்தில நுழையக்கூடாது என்றால் நுழைவோம். எங்களுக்கும் அனைவருக்குமான உரிமைகள் உள்ளது என்பதற்கான குரலுக்கு பெயர் தான் அத்துமீறு" என்று தெரிவித்தார்.