'நாவடக்கம் இன்றித் திரியும் திமுகவினருக்கு, தமிழ்நாடு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்' - அண்ணாமலை
- கடந்த 100 ஆண்டுகளில் கல் தூணில் தீபம் ஏற்றப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை
- மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுகவினர் செயல்பாடுகளை, நீதிமன்றம் சுட்டிக் காட்டினால், நீதிமன்றத் தீர்ப்பையே அவமதிக்கின்றனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கோயில் கல் தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,
"கடந்த 100 ஆண்டுகளில் கல் தூணில் தீபம் ஏற்றப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. சுடுகாட்டில் தான் உடலை எரிக்க வேண்டும் என்றால் சுடுகாட்டில் தான் எரிக்க வேண்டும். வேறு இடத்தில் எரிக்க மாட்டார்கள். அது போல எந்த பழக்க வழக்கத்தையும் மாற்றக் கூடாது. ஒரு இடத்தில் இதுதான் நடக்க வேண்டும் என்றால் அந்த இடத்தில் அதுதான் நடக்க வேண்டும். இந்த தீர்ப்பின் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கின்றனர். இல்லாத ஒரு வழக்கத்தை புகுத்தக்கூடாது." என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் ரகுபதியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை. இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
"திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கும் பெயரில், "சுடுகாட்டில்தான் பிணத்தை எரிக்க வேண்டும்; பழக்க வழக்கங்களை மாற்றக் கூடாது" என்று திமுக அமைச்சர் ரகுபதி பேசியிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
நூற்றாண்டுகளாக நிலவி வரும் தமிழ்நாடு மக்களின் ஆன்மீக மரபுகளை அவமதிப்பதும், ஹிந்து மத மக்களின் வழிபாட்டு உரிமை, பண்பாடு என இவை அனைத்தையும், முதலமைச்சர் உட்பட திமுகவினர் தொடர்ந்து கேலி செய்து வருவதும், திமுக அரசின் ஹிந்து மத விரோத மனநிலையை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுகவினர் செயல்பாடுகளை, நீதிமன்றம் சுட்டிக் காட்டினால், நீதிமன்றத் தீர்ப்பையே அவமதிக்கின்றனர். நாவடக்கம் இன்றித் திரியும் திமுகவினருக்கு, தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.