பயணம் நிறைவு..! நாளை சென்னை திரும்பும் முதலமைச்சருக்கு பிரம்மாண்ட வரவேற்பு
- சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை திரும்புகிறார்.
- 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 17,613 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளன.
ஜெர்மனி, லண்டன் பயணத்தை முடித்து விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை திரும்புகிறார் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்தார்.
கடந்த மாதம் 30-ந்தேதி புறப்பட்டு சென்றிருந்த அவர் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளில் முன்னணி தொழில் அதிபர்களை சந்தித்தார்.
அப்போது ரூ.15,516 கோடிக்கு தொழில் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் போடப்பட்டன.
லண்டன் சென்றிருந்தபோது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் தந்தை பெரியார் உருவ படத்தை திறந்து வைத்து பெருமை சேர்த்தார்.
ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து தனது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று லண்டனில் இருந்து சென்னை புறப்பட்டார்.
அவரது விமானம் நாளை காலை 7.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைகிறது. அவருக்கு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்துள்ளார்.
மாவட்டம் முழுவதும் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் விமான நிலைய வாசலில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் வரை பிரமாண்ட வரவேற்பு கொடுக்க உள்ளனர்.