சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதத்தை கைவிட முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்- கனிமொழி எம்.பி.
- சசிகாந்த் செந்திலுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததால் மருத்துவமனையில் அனுமதி.
- சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
தொடர்ந்து நேற்று முன்தினம் 2வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ஈடுபட்டு வந்தார்.
அப்போது, சசிகாந்த் செந்திலுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததால் அம்மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேற் சிகிச்சைக்காக சசிகாந்த் செந்தில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், சசிகாந்த் தொடர்ந்து உண்ணவிரதத்தை கடைப்பிடித்த வருகிறார். இந்நிலையில், சிகிச்சையில் இருக்கும் சசிகாந்தை, திமுக எம்பி கனிமொழி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சசிகாந்தை சந்தித்த பின் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளரகளுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சசிகாந்த் செந்தில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அவரை சந்தித்து இதனை தெரியப்படுத்தினேன். நமது உரிமைகளை பெறுவதற்கு இன்னும் பல வழிகள் உள்ளன.
உடல் நலனை வருத்திக் கொள்ள வேண்டாம். திமுகவும், தமிழ்நாடு அரசும் தொடர்ந்து போராடி கல்வி நிதியை பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.