இந்தியாவில் கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு ஒளி விளக்காக உயர்ந்து நிற்கிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- உலகளாவிய வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாட்டு மாணவர்களை தயார் படுத்துவது தான் நமது நோக்கம்.
- அறிவியல், தொழில்நுட்பத்தில் ஏற்படும் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு சமூகநீதியை அடிப்படையாக கொண்ட மாநிலம். திராவிட மாடல் ஆட்சியில் கல்விக்கு தான் முக்கியத்துவம் வழங்கப்படும்.
இந்தியாவில் கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு ஒளி விளக்காக உயர்ந்து நிற்கிறது.
உலகளாவிய வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாட்டு மாணவர்களை தயார் படுத்துவது தான் நமது நோக்கம்.
அறிவியல், தொழில்நுட்பத்தில் ஏற்படும் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும்.
தரமான கல்வியால் நாம் நாட்டை வழி நடத்தி வருகிறோம். தேசிய கல்விக் கொள்கையால் 2030-க்குள் அடையலாம் என்ற கல்வி வளர்ச்சியை நாம் இப்போதே அடைந்து விட்டோம்.
உயர்கல்வி தர வரிசையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. திராவிட மாடல் அரசின் நடவடிக்கையால் அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வது 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
நாம் உருவாக்க உள்ள மாற்றங்களின் பலன்கள் நமது மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும்.
நாட்டின் சிறந்த கல்வி ஆலோசகர்களுடன் அடுத்தக்கட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்த உள்ளோம்.
தொழில்துறையினருடன் இணைந்து நாம் புதிய பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். AI மற்றும் கிரீன் எனர்ஜி போன்றவை தான் பொருளாதார மாற்றங்களை மேற்கொள்கிறது.
நமது பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகளை மாற்றி அமைக்க வேண்டும்.
நான் முதல்வன் திட்டம் 27 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. மருத்துவ சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.