நீலகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது
- கோத்தகிரி நேரு பூங்காவில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடக்கிறது.
- நுழைவு வாயில் முழுவதும் பல டன் காய்கறிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
கோத்திகிரி:
நீலகிரி மாவட்டத்திற்கு தினந்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரிக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நீலகிரியில் கோடைவிழா என்ற பெயரில் மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோடைவிழா இன்று கோத்தகிரி நேரு பூங்காவில் 13-வது காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.
கோத்தகிரி நேரு பூங்காவில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடக்கிறது.
காய்கறி கண்காட்சியை முன்னிட்டு பல ஆயிரம் டன் காய்கறிகளை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் பூங்காவில் செய்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் பூங்கா முழுவதும் பல ஆயிரம் மலர் செடிகளில் பல்வேறு வகையான மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
இந்த கண்காட்சியில் தமிழ் கலாசாரத்தை பறை சாற்றும் வகையில் ஜல்லிக்கட்டு காளை, தமிழரின் வீரத்தை பறைசாற்றும் வகையில் சிலம்பாட்டம் வடிவமைப்பு, மரகதபுறா, மிளகாய், கேரட் உள்ளிட்ட காய்கறிகளை கொண்டு பச்சைக்கிளி, வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட உருவங்கள் வடிவமைக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன.
இதுதவிர தோட்டக்கலைத்துறை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விளைபொருட்கள் 15 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. குழந்தைகளை கவரும் வகையில் பல வண்ண உருவங்களும் செய்யப்பட்டிருந்தன.
மேலும் நுழைவு வாயில் முழுவதும் பல டன் காய்கறிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
கண்காட்சி தொடங்கியதை முன்னிட்டு இன்று காலை முதலே கோத்தகிரி நேரு பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர்.
அவர்கள் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளை, மரகதபுறா, பச்சைக்கிளி உள்ளிட்ட உருவங்களையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். அதன் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
மேலும் அங்கு பூத்து குலுங்கிய மலர்களையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.