தமிழ்நாடு செய்திகள்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் தனது இன்னொரு முகத்தை காட்டி உள்ளார்- சபாநாயகர் அப்பாவு தாக்கு

Published On 2025-12-07 13:49 IST   |   Update On 2025-12-07 13:49:00 IST
  • நயினார் நாகேந்திரன் மதுரையை கலவர பூமியாக மாற்ற வேண்டும் என்று சொன்னால் என்ன நியாயம் உள்ளது.
  • சட்டத்தின் ஆட்சி முதலமைச்சரால் நடத்தி வரப்படுகிறது.

நெல்லை:

சபாநாயகர் அப்பாவு இன்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உயர்கல்வி நிறுவனங்களில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என சொல்வதற்கு யு.ஜி.சி.க்கு அதிகாரம் கிடையாது. பல்கலைக்கழகங்களுக்கு ஆலோசனை மட்டுமே யு.ஜி.சி. வழங்க முடியும். அதனை ஏற்பதும், ஏற்காமல் இருப்பதும் மாநில அரசின் உரிமை. மாநிலத்தால் இயங்கும் பல்கலைக்கழகத்தின் முழு உரிமை.

உச்சநீதிமன்றம் யு.ஜி.சி. உத்தரவிடும் அதிகாரம் கிடையாது என தெளிவாக சொல்லிவிட்டது. பல்கலைக்கழகத்திற்கு மானியம் கொடுப்பதுதான் அவர்களது பணி. ஆனால் அதனை விட்டு மீதி பணிகளை யு.ஜி.சி. செய்கிறது. மத்திய அரசின் ஏவலர்களாக சி.பி.ஐ., வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை இருந்த நிலையில் இப்போது தேர்தல் ஆணையமும், யு.ஜி.சி.யும் வந்து விட்டது.

பா.ஜ.க.வின் மாநில தலைவரும், சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரனின் ஒரு முகம் மட்டும் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்னொரு முகம் அவரிடம் இருப்பதை நேற்று திருப்பரங்குன்றம் விவகாரத்தில் காட்டி உள்ளார். அதனை நயினார் நாகேந்திரன் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை, மெட்ரோ ரெயில் தேவை. அதை சொல்வதை விட்டுவிட்டு நயினார் நாகேந்திரன் மதுரையை கலவர பூமியாக மாற்ற வேண்டும் என்று சொன்னால் என்ன நியாயம் உள்ளது. அமைதியாக உள்ள இடத்தில் தான் கலவரம் செய்ய முடியும்.

அறுபடை வீட்டில் ஒரு இடத்தில் மட்டும் தான் சிக்கந்தர் தர்கா உள்ளது. மற்ற இடத்தில் இது போன்ற எந்த விவகாரமும் இல்லை. சிக்கந்தர் தர்கா இருப்பதால் சண்டையை உருவாக்க நினைப்பதால் அமைதியாக இருக்கும் தமிழகத்தை, கலவர பூமியாக மாற்ற நினைத்தால் அது நடக்காது.

சட்டத்தின் ஆட்சி முதலமைச்சரால் நடத்தி வரப்படுகிறது. எந்த சலசலப்புக்கும் தமிழக அரசு அஞ்சாது. இந்தியாவின் வழிகாட்டி தமிழகம் தான். இந்த ஆட்சி தொடரும். திராவிட ஆட்சியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. பெரியார் அண்ணா, கலைஞர், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் என வழி வழியாக ஆட்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்றார். 

Tags:    

Similar News