இதை பண்ணா கண்டிப்பா 1000 ரூபாய் அபராதம்- தெற்கு ரெயில்வே எச்சரிக்கை
- ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மூலம் ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
- விதிமீறல்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
சென்னை:
நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் எளிதான பயணத்திற்காக சில விதிகளை ரெயில்வே வாரியம் விதித்துள்ளது. குறிப்பாக, ரெயில்களில் விபத்து ஏற்படுத்தும் வகையிலான பொருட்களை கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், ரெயில்களில் எளிதில் தீப்பற்றும் பொருட்களான அடுப்புகள், எரியக்கூடிய ரசாயனங்கள், பட்டாசுகள், கழிப்பறை சுத்தம் செய்யும் அமிலம், டீசல், பெட்ரோல், சிகரெட் போன்றவற்றை எடுத்துச் செல்ல தடை உள்ளது. இந்த தடை தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. ஆனால், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் வியாபாரிகள் மற்றும் பயணிகள் பட்டாசு உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
ரெயில்களில் ஆபத்தான பொருட்களை எடுத்துச்செல்வது தண்டனைக்குரிய குற்றம் எனவும், எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கக்கூடிய பொருட்களை ரெயிலில் எடுத்து செல்லாமல் பயணிக்க வேண்டும் எனவும் தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, பண்டிகை காலங்களில் இந்த சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறுவதால், ஒவ்வொரு ஆண்டும் முன்னதாகவே ரெயில்வே நிர்வாகம் சார்பில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மூலம் ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியபோது, 'ரெயில்களில் பட்டாசு உள்பட தீ விபத்து ஏற்படுத்தும் பொருட்கள் கொண்டு செல்ல தடை உள்ளது. இதுகுறித்து பெரும்பாலான பயணிகளுக்கு விழிப்புணர்வு இருப்பதால் ரெயில்களில் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள் எடுத்து செல்வதில்லை. சிலர் பண்டிகை காலங்களில் விதிமுறைகளை மீறி பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து வருகின்றனர். இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகிறது.
எனவே, தடையை மீறி பட்டாசு கொண்டு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரெயிலில் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு சென்று, முதல் முறையாக பிடிபட்டால் ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும். தொடர்ந்து, விதிமீறல்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்' என்றார்கள்.