பழவேற்காடு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறை- பொதுமக்கள் குற்றச்சாட்டு
- அரசு ஆஸ்பத்திரி போதிய கட்டிட வசதி இன்றி செயல்பட்டு வருகிறது.
- ஆஸ்பத்திரியில் ஒரு தலைமை மருத்துவர் மற்றும் 3 டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளனர்.
பொன்னேரி:
பழவேற்காட்டை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் பழவேற்காடு ஏரி அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். தினந்தோறும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள், 20-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால் அரசு ஆஸ்பத்திரி போதிய கட்டிட வசதி இன்றி செயல்பட்டு வருகிறது. மருத்துவமனை தரைதளம் ஆங்காங்கே இடிந்தும் அடிக்கடி விஷ பூச்சிகள் உள்ளே செல்வதால் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் அச்சத்துடன் இருக்கும் நிலை உள்ளது. மேலும் இந்த ஆஸ்பத்திரியில் ஒரு தலைமை மருத்துவர் மற்றும் 3 டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளனர்.
நாளுக்கு நாள் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் முறையான சிகிச்சை பெற முடியவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
எனவே பழவேற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, பழவேற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும்.
ஆஸ்பத்திரியில் காவலாளிகள் இல்லை. மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள டச்சுக்காரர்கள் காலத்தில் கட்டிய கட்டிடம் மிகவும் சேதம் அடைந்து மரம், செடி, கொடிகள் வளர்ந்த நிலையில் காணப்படுகிறது.
இதனால் இந்த கட்டிடத்தில் இருந்து பாம்புகள் அடிக்கடி ஆஸ்பத்திரிக்குள் புகுந்து விடுகின்றன என்றனர்.