தமிழ்நாடு செய்திகள்

ஈரோட்டில் விஜய் பங்கேற்கும் பிரசார கூட்டம் வரலாறு படைக்கும்- செங்கோட்டையன்

Published On 2025-12-12 13:02 IST   |   Update On 2025-12-12 13:02:00 IST
  • பிரசார கூட்டம் காலை 11 மணி முதல்1 மணி வரை நடைபெற இருக்கிறது.
  • விஜயை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளும் யாராக இருந்தாலும் கூட்டணிக்கு வரலாம்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் திருச்சி, நாகப்பட்டினம், கரூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

கரூரில் நடந்த பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த 3 இடங்களிலும் நடைபெற்ற பிரசார கூட்டத்துக்கு ஏற்கனவே கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அதன் பிறகு அனுமதி அளிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தினர் விஜய்யின் பிரசாரத்துக்காக தேர்வு செய்து ஒப்புதல் கேட்கும் இடங்களை பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி மாவட்ட காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

இது தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகள் கூறும் போது, விஜய்யின் அனைத்து கூட்டங்களுக்கும் கடுமையான போராட்டத்துக்கு பிறகே அனுமதி கிடைத்து வருவதாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இப்படி தமிழகத்தில் கூட்டம் நடத்துவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.

தமிழகத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று 70 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில் ஈரோட்டில் விஜய்யின் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

ஆனால் அங்கு 3 இடங்களை தேர்வு செய்து அடையாளம் காட்டியுள்ள நிலையிலும் விஜய்யின் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது மாவட்டமான ஈரோட்டில் செல்வாக்கை நிரூபிப்பதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். இதை தொடர்ந்து விஜய்யின் பிரசாரத்துக்கான இடங்களை அவரே நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்து வருகிறார்.

இதன்படி ஈரோடு மாவட்டம் பவளத்தாம் பாளையம் பகுதியில் தனியார் இடத்தை தேர்வு செய்து அங்கு விஜய்யின் பொதுக்கூட்டத்தை வருகிற 16-ந்தேதி நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.

அந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த மாவட்ட போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து இடமும், தேதியும் மாற்றப்பட்டது. 16-ந்தேதிக்கு பதில் வருகிற 18-ந்தேதி விஜய் பிரசாரம் மேற்கொள்வார் என்று அறிவித்த செங்கோட்டையன் பெருந்துறை அருகே உள்ள சரளை என்ற இடத்தில் 19 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து போலீசாரிடம் அடையாளம் காட்டினார்.

அந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த மீண்டும் அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டது.

அங்கு பொதுக்கூட்டம் நடத்த போலீஸ் தரப்பில் 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதனால் த.வெ.க. வினர் அதிர்ச்சி அடைந்தனர். எப்படியாவது அந்த இடத்தில் பிரசார கூட்டம் நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த த.வெ.க.வினர் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் புதிய சிக்கலாக பிரசாரத்துக்கு தேர்வு செய்யப்பட்ட இடம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 31 ஏக்கர் பரப்பின் ஒரு பகுதியாக இருப்பது தெரிய வந்தது. இதனால் கோவில் இடத்தில் அரசியல் கட்சி நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க கூடாது என்று மாவட்ட நிர்வாகத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை கடிதம் அனுப்பி உள்ளது.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறும்போது, விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 31 ஏக்கர் பரப்பளவில் நிலம் உள்ளது. இந்த நிலம் அரசின் ஆவணங்களின்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. சம்பந்தப்பட்ட நிலத்தை நீண்ட காலமாக அந்த பகுதியில் உள்ள ஒரு குறிப்பி ட்ட சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ஒரு பகுதியான 19 ஏக்கர் பரப்பளவில் த.வெ.க. வினர் பொதுக்கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி மனு அளித்திருக்கின்றனர். இதனால் பொதுக்கூட்டம் நடத்து வதற்கான அனுமதியை இந்து சமய அற நிலையத்துறையிடம் த.வெ.க.வினர் அனுமதி வாங்காத நிலையில் அங்கு பிரசார கூட்டம் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகத்திற்கும், மாவட்ட போலீஸ் துறைக்கும் விஜயபுரி அம்மன் கோவில் செயல் அலுவலர் கடிதம் அளித்துள்ளார் என்றனர்.

இதனால் திட்டமிட்டபடி வரும் 18-ந்தேதி மேற்கண்ட இடத்தில் விஜய்யின் பிரசாரக் கூட்டம் நடைபெறுவதில் சிக்கல் எழுந்து நீடித்து வருகிறது. அப்படி அனுமதி கிடைக்கவில்லை என்றால் கோர்ட்டை நாடுவதா? அல்லது வேறு இடத்தை தேர்வு செய்வதா? என்ற குழப்பத்தில் த.வெ.க.வினர் உள்ளனர்.

இதற்கிடையே மாவட்ட நிர்வாகம் சார்பில் முதலில் தேர்வு செய்யப்பட்ட சரளையில் விஜய் பிரசார கூட்டம் நடத்துவதில் எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் போலீசாரின் அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து இன்று கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செங்கோட்டையன் தலைமையில் நிர்வாகிகள் இது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே பிரசாரக்கூட்டம் நடைபெறும் இடத்தை முன்னாள் அமைச்சர், த.வெ.க, அமைப்பு செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமையிலான த.வெ.க. வினர் இன்று பார்வையிட்டனர்.

அதைத்தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் , ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே பிரசார கூட்டம் நடைபெற உள்ள இடத்திற்கு வரும் 18-ந் தேதி வருகை தர உள்ளார்.

பிரசார கூட்டம் காலை 11 மணி முதல்1 மணி வரை நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் மேற்கொண்டு வருகிறோம்.

அரசு அலுவலர்கள் கேட்டது போல பல்வேறு பணிகளை நிறைவேற்றி தருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்னென்ன ஆலோசனைகளை சொல்கிறார்களோ, அதனை ஏற்று செய்வதற்கு தயாராக இருக்கிறோம்

புதுச்சேரி பிரசாரத்திற்கு பிறகு தமிழகத்தில் முதன் முறையாக ஈரோடு வருகை தர உள்ளார். இந்த நிகழ்ச்சி வரலாறு படைக்கும் வகையில் இருக்கும்.

தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் நாயகன், மக்களால் எதிர்காலத்தில் அரியணையில் அமர்த்த போகிற தலைவர் விஜயை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளும் யாராக இருந்தாலும் கூட்டணிக்கு வரலாம்.

நாங்கள் அன்போடு அரவணைத்துக் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். நேற்று நடந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. அவர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் கூட்டணிக்கு வருபவர்களை வரவேற்கிறோம்.

யாரைக் கூட்டணியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை தலைவர் விஜய் முடிவு செய்வார்.

இந்து அறநிலைத்துறை பொறுத்தவரை கடிதங்கள் கொடுப்பது அந்த துறையைச் சார்ந்த ஆலயத்திற்கு கொடுக்க வேண்டும். ஆனால், அங்கு கொடுக்காமல் காவல்துறைக்கு கொடுத்திருக்கிறார்கள்.

த.வெ.க. அ.தி.மு.க.வாக மாறும் என்று நான் சொல்லவில்லை. த.வெ.க.வில் பல பேர் இணைய வாய்ப்பு உள்ளது என்றேன்.

விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் விஜய் பிரசாரம் செய்ய எந்தவித தடையும் இல்லை.

என்னை வரவேற்கிற வாழ்த்தும் என்னை அரவணைத்து செல்லும் இயக்கத்தில் சேர்வதால் தவறில்லை. த.வெ.க.வில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். எம்ஜி.ஆர்- ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க.வில் எப்படி இருந்தேனோ, அப்படி தான் த.வெ.க.வில் இருக்கிறேன். மக்கள் மத்தியில் த.வெ.க,வுக்கு வரவேற்பு இருக்கிறது என்றார்.

Tags:    

Similar News